ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை முன்னிறுத்துமாறு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச போட்டியிட்டால் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பசில் ராஜபக்ச பரிசீலித்து வருவதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை மீளப் பெற்றுக்கொண்டு தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வர உள்ளார்.
அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
இதேவேளை, இம்முறையும் பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தால், அதற்காக அவருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட தயாராகி வருகிறார்.
அவரைத் தவிர பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பலர் அதற்குத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட மற்றும் பலம் வாய்ந்த உறுப்பினர்கள் பலர் கடந்த வாரம் கட்சியின் தலைமையகத்தில் பல சுற்று விசேட கலந்துரையாடல்களை நடத்தினர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இதுதொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் பசில் ராஜபக்ச இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.