உள்நாட்டு கடனை மறுசீரமைத்து வரும் அரசாங்கம் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் உள்நாட்டில் மாத்திரம் 23 ஆயிரத்து 220 கோடி ரூபா கடனை பெற்றுக்கொண்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சு வௌியிட்ட 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 31 ஆம் திகதி வரை திறைசேரி உண்டியல்கள் மூலம் பெறப்பட்ட கடன் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன் அது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி 14 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை வெளியிடப்பட்ட திறைசேரி பிணைமுறிகளின் பெறுமதி 23.9 பில்லியன் டொலர்களாக இருந்தன.
எனினும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை அந்த தொகை 27 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இது 16 சத வீத அதிகரிப்பு என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..