Post

Share this post

பெண்ணை தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை?

ஓர் இளம்பெண்ணை 10 வினாடிகளுக்கு குறையாக சீண்டுவது பாலியல் வன்கொடுமை ஆகாதா?
இதுதான் இத்தாலி குடிமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் எழுப்பிவரும் மில்லியன் டாலர் கேள்வி.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான பள்ளி காவலாளி ஒருவரை, அவர் மேற்கொண்ட பாலியல் சீண்டல் ‘நீண்ட நேரம் நீடிக்கவில்லை’ எனக் கூறி, நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்துதான், 10 வினாடிகளுக்கு குறைவான நேரத்தில் மேற்கொள்ளப்படும் சீண்டல்கள் பாலியல் வன்கொடுமை ஆகாதா என்ற கேள்வி பொதுவெளியில் எழுந்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்துவந்த 17 வயது இளம்பெண், 2022 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
தனது வகுப்பறையை நோக்கி மாடிப் படிக்கட்டில் அவர் ஏறிக் கொண்டிருந்தபோது, திடீரென யாரோ தன்னை பின்பக்கமாக தொடுவது போலவும், தனது கீழாடையை கழற்றுவது போலவும் மாணவி உணர்ந்தார்.
உடனே அதிர்ச்சியுடன் அவர் திரும்பி பார்த்தபோது, அவரை பார்த்து சிரித்த பள்ளியின் காவலாளி, “அன்பே, விளையாட்டுக்காக இப்படி செய்கிறேன் என்று உனக்கு தெரியும்” என்றுக் கூறி அசடு வழிந்தார்.
காவலாளியின் இந்த விளக்கத்தைக் கேட்டு கோபமடைந்த மாணவி, பள்ளி நிர்வாகியான அன்டோனியோ அவோலா என்பவரிடம் புகார் அளித்தார்.
மாணவியின் சம்மதம் இன்றி அவரை தான் சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகதான் அப்படி செய்தேன் என்று எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெகுஇயல்பாக கூறினார்.
பள்ளி மாணவியை காவலாளி சீண்டிய விவகாரம், நீதிமன்றம் வரை சென்றது. மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று இவ்வழக்கு விசாரணையின்போது மாணவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காவலாளியை சில தினங்களுக்கு முன் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் ரீதியாக சீண்டி உள்ளதால் அதை குற்றமாக கருத முடியாது” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இத்தாலி மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை விமர்சித்து ‘கொஞ்ச நேரம் தொடுதல்’ என்ற தலைப்பில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களின் ஆதகங்களை பொதுமக்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். அத்துடன், #10secondi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் சில தினங்களாக டிரெண்டிங்கில் உள்ளது.
அத்துடன் சிலர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை காட்சிப்பூர்வமாக விமர்சித்து வருகின்றனர். அவர்கள் தங்களது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டப்படி 10 வினாடிகள் கேமிரா முன் மௌனமாக நிற்பது போன்ற வீடியோக்களை தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். 10 வினாடிகள் என்பது எவ்வளவு நீளமான நேரம் என்பதை உணர்த்தும் நோக்கில் அவர்கள் இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இவர்களில் முதல் நபராக, பிரபல நடிகர் பாவ்லோ காமிலி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரது இந்த அணுகுமுறையை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.
அவரை போலவே இன்ஸ்டாகிராமில் 29.4 மில்லியன் பின்தொடர்பவர்களை (Followers) கொண்ட மற்றொரு பிரபலமான சியாரா ஃபெராக்னி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
“10 வினாடிகள் நீண்ட நேரம் இல்லை என்பதை யார் தீர்மானிப்பது? ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அதற்கான நேர அளவை யார் வரையறை செய்வது? என்று டிக்டாக்கில் கேள்வி எழுப்பி உள்ளார் இத்தாலியின் மற்றொரு பிரபலமாக திகழும் பிரான்செஸ்கோ சிக்கோனெட்டி.
“ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவரை ஒரு வினாடி கூட தொடுவதற்கு ஆணுக்கு உரிமை இல்லை. அப்படியிருக்கும்போது இதில் 5 அல்லது 10 நொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றும் அவர் காட்டமாக கூறியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் இத்தாலியில் எவ்வளவு சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது என்பதையே இந்த வழக்கின் தீர்ப்பு உணர்த்துகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“இந்த தீர்ப்பு அபத்தமானது. பாலியல் துன்புறுத்தலின் கால அளவை கருத்தில் கொண்டு, அதன் தீவிரத்தை குறைவாக மதிப்பிடக் கூடாது” என்று ஃபிரீடா என்ற பிரபலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், “ காவலாளி இளம்பெண்ணிடம் காமம் இல்லாமல் அருவருக்கத்தக்க விதத்தில் நடந்துக் கொண்டிருக்கிறார். இந்தச் செயலை மேற்கொள்ள அவர் தாமதிக்கவில்லை. அதாவது தனது மோசமான செயலுக்காக அவர் நீண்ட நேரம் எடுத்து கொள்ளவில்லை” என்பது நீதிபதிகளின் பார்வையாக உள்ளது.
“நான் கேலி செய்யப்பட்டதாக மட்டும் கருதி நீதிபதிகள் இப்படி தீர்ப்பளித்துள்ளார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எனக்கு நேர்ந்த கொடுமையை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது” என்று, ‘கொரியர் டெல்லா செரா’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சம்பந்தப்பட்ட மாணவி கூறியுள்ளார்.
“சத்தம் போடாமல் என் அருகில் வந்து பின்புறமாக என்னை தொட்ட காவலாளி, எனது கீழாடையை இழுத்துவிட்டு, என்னை இறுக பற்றித் தூக்கி, அந்தரங்க உறுப்புகளை தொட்டுத் துன்புறுத்தி உள்ளார். இது ஒன்றும் வேடிக்கையான விஷயம் அல்ல. வயதான ஒருவர் ஒரு இளம்பெண்ணிடம் இப்படியெல்லாம் விளையாடக் கூடாது” என்று பாதிக்கப்பட்ட மாணவி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“என்னை அவர் பாலியல் ரீதியாக சீண்டுகிறார் என்று உணர வைக்க அந்த 10 நொடிகளே மிகவும் அதிகம்” என்றும் மாணவி கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகமும், நீதிமன்றமும் தமக்கு அநீதி இழைத்துவிட்டதாக கருதுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
“இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படவில்லை. இதன் மூலம், நாட்டின் நீதி பரிபாலன முறையை நம்பியது தவறு என்பதை உணர தொடங்கி இருக்கிறேன்” என்றும் மாணவி கூறியுள்ளார்.
என்னை போன்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் சிறுமிகள், தைரியமாக புகார் அளிப்பதைத் தடுக்கும் விதத்தில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகள் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய முகமை அண்மையில் ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 2016 -2021 இடைப்பட்ட ஆண்டுகளில், இத்தாலியை சேர்ந்த பெண்களில் 70 சதவீதம் பேர், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவில்லை.
“தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளிப்பது சரியான விஷயமாக இருக்காது என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கருதியிருக்கலாம். ஆனால், பெண்களின் இந்த மெளனமே பாலியல் குற்றம் புரிபவர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. எனவே தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும்” என்கிறார் இத்தாலி மாணவி.

Leave a comment