Post

Share this post

எலான் மஸ்க் தயாரிக்கும் தமிழ் சினிமா!

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான ‘கொலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ‘விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். ‘கொலை’ படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து படக்குழுவினர் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசியதாவது, பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல! எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும்.
ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குனர் பாலாஜி, எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் எலான் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐ.ஏ.எஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யாவுக்கு நன்றி என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பேசினார்.

Leave a comment