இந்த ஜூன் மாதத்தின் முதல் பாதியில் இந்தியாவின் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது : கடந்த ஜூலை 1 முதல் 15 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், நாட்டின் எரிபொருள் பயன்பாட்டில் 5 இல் 2 பங்கு வகிக்கும் டீசலின் விற்பனை 29.6 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் சரிவாகும்.
2022 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களோடு ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் டீசல் விற்பனை முறையே 6.7 சதவிகிதம் மற்றும் 9.3 சதவிகிதம் உயா்ந்தது.
அந்த மாதங்களில் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்தது, கோடையின் வெப்பத்தை சமாளிக்க காா்களில் குளிரூட்டிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது போன்ற காரணங்களால் டீசலின் விற்பனை அதிகரித்தது.
ஆனால், ஜூன் மாதத்தில் பருவமழை காரணமாக வெப்பம் தணிந்ததாலும், விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் தேவை குறைந்ததாலும் டீசல் விற்பனை சரிந்தது.
அதன் தொடா்ச்சியாக, இந்த ஜூலை மாதத்தின் முதல் 15 நாள்களிலும் இதே காரணங்களால் டீசல் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் நாட்டின் பெட்ரோல் விற்பனை 10.5 சதவீதம் குறைந்து 12.5 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதன் விற்பனை 10.8 சதவீதம் குறைந்துள்ளது.
ஜூலை 1 – 15 காலகட்டத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை 12.7 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 6.3 சதவீதம் குறைவாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.