Post

Share this post

ரத்தம் தெறிக்கத் தெறிக்க ‘அநீதி’

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன்தாஸ், துஷாரா நடிப்பில் வெளியாகியிருக்கிற திரைப்படம் அநீதி. வெயில், அங்காடித்தெரு திரைப்படங்களில் ரசிகர்களைக் கட்டிப் போட்ட இயக்குநரின் நீண்ட நாள் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது அநீதி.
ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் இருந்தது அழுத்தமாக இருந்தது, ஆனால் இன்றைக்கு வேலையே எவ்வளவு அழுத்தமாக இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு தாராளமயக் கொள்கை, சங்க உரிமைகள், தொழிலாளர் நலன், செயற்கை நுண்ணறிவு என வாய்ப்புள்ள அனைத்தையும் பேச முனைந்து கச்சிதமாக வெளிப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். அங்காடித்தெரு திரைப்படத்தில் அவர் ஏற்படுத்திய அழுத்தம் சிறிதும் குறையாமல் அதேசமயம் வித்தியாசமான திரைக்கதையில் வெளிப்பட்டிருக்கிறது அநீதி.
சென்னை பெருநகரத்தில் யாருமற்ற இளைஞராக வரும் அர்ஜூன் தாஸ் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அந்த வேலை கொடுக்கும் மரியாதையின்மையும், அதனால் ஏற்படும் மன அழுத்தமும் அந்த இளைஞருக்கு யாரையும் கொலை செய்யும் எண்ணைத்தைக் கொடுக்கிறது. அந்த நேரத்தில் இளைஞர் அர்ஜூன் தாஸுக்கு ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணான துஷாரா விஜயனின் காதல் கிடைக்கிறது. ஆதரவற்ற பின்னணி கொண்ட இருவருக்கும் இடையில் சுமூகமான வாழ்வு தொடங்கும்போது துஷாரா விஜயனின் முதலாளிப் பெண் திடீரென இறந்துவிடுகிறார். அவரின் இறப்பிற்கான பழி அர்ஜூன் தாஸ் மற்றும் துஷாரா விஜயனின் மீது விழுகிறது. அந்தக் கொலைப்பழியிலிருந்து அவர்கள் தப்பித்தனரா? அர்ஜூன் தாஸின் மனநலப் பிரச்னை என்ன ஆனது? என்பதுதான் அநீதி திரைப்படத்தின் கதை.
எல்லாம் வியாபாரமாகிப் போன, எல்லாம் பணமாகிப் போன சமூகத்தில் செல்வம் மனிதர்களை எப்படி நடத்துகிறது? செல்வந்தர்கள் தங்களைவிட செல்வம் குறைவானவர்களை எப்படி நடத்துகின்றனர்? வேலை கொடுத்த அழுத்தம் தொழிலாளர்களை எந்தளவு வதைக்கிறது என்பதை எளிய நடையில் அதேசமயம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது திரைக்கதை. உணவு விநியோகம் செய்யும் இளைஞனாக வரும் அர்ஜூன் தாஸ் காட்சிகளுக்கு காட்சி உயிரைக் கொடுத்திருக்கிறார். மன அழுத்தம் கொண்ட இளைஞனான கதாபாத்திரத்திற்கு கச்சித்தமாக பொருந்தியிருக்கிறார். கோபத்தால் வெடிக்கும் இடங்களிலும், துஷாரா விஜயனின் கரத்தைப் பார்த்து தவிக்கும் காட்சிகளிலும் பின்னியிருக்கிறார். முந்தைய திரைப்படங்களில் வில்லனாக இருந்த அர்ஜூன் தாஸை இந்தப் படத்தில் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
துஷாரா விஜயன் என்றதும் நமது நினைவுக்கு வரும் துணிச்சலான பெண் எனும் தோற்றத்தை மறைக்கவே அவர் இத்திரைப்படத்தை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். முந்தைய திரைப்படங்களில் வந்த “நேருக்கு நேர்” பாணியிலிருந்து விலகி தனது முதலாளிப் பெண்ணிடம் அடங்கி ஒடுங்கி அழும் காட்சிகளின் மூலம் வென்றிருக்கிறார் துஷாரா விஜயன். உயிர் வாழ்தலுக்குத் தேவையான பணத்திற்காக பணியிடத்தில் அவமானப்படும் இடங்களில் இதயத்தை நொறுங்கச் செய்திருக்கிறார். அர்ஜூன் தாஸிடம் ஆதரவாக தஞ்சம் புகுவதிலிருந்து அவர் மீது கோபம் கொண்டு அடிப்பது வரை துஷாரா தூள் கிளப்பியிருக்கிறார். துணை கதாபாத்திரங்களும் காட்சிக்கு காட்சி கைகொடுத்திருக்கின்றனர். சுரேஷ் வெங்கட், வனிதா, பரணி, ஷா ரா, காளி வெங்கட், அர்ஜூன் சிதம்பரம் என பலரும் திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.
குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகளில் அர்ஜூன் தாஸின் அப்பாக வரும் காளி வெங்கட் வெகுளியான பரிதாபத்திற்குரிய வகையிலான கதாபாத்திரத்தை தாங்கியிருக்கிறார். முதலாளியிடம் தனது மகனுக்காக கெஞ்சும்போது ரசிகர்களையும் அழ வைக்கிறார் மனிதர். அவரின் நடிப்பு அத்தனை உண்மையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த மகன் – தந்தை காட்சிகளில் சிறப்பான காட்சியாக அநீதியைக் குறிப்பிடலாம். திரைப்படத்தில் பேசப்பட்ட பல காட்சிகள் நடப்பு அரசியலை தோலுரிக்கின்றன. உணவு விநியோகம் செய்யும் இளைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள், சொத்துக்காக மட்டும் கவனிக்கப்படும் பெற்றோர், தனியார்மயமாகிவரும் நாடு என பல பேசப்பட வேண்டியவற்றை பேசியிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். அவரின் எளியோருக்கான இந்த குரலுக்காகவே அவரைப் பாராட்டலாம்.
இந்தியாவுக்கு கீழ பிரைவேட் லிமிடெட் போட்டுடுவாங்க போல, தண்ணீர் விக்கற விலைக்கு தண்ணி வேணுமா உனக்கு, சாப்பாடு போடுதுன்னா சங்கம்தான் முக்கியம் போன்ற வசனங்கள் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. இறுதிக்காட்சிகளில் அர்ஜூன் தாஸ் பேசும், ”கைகூப்பி நிற்கறவங்க மன்னிப்பை ஏத்துக்காதவன் மனுஷன் இல்லை மிருகம்” என சொல்லும் வசனம் நம் மனதின் அடிஆழத்தைத் தொட்டுப்பார்க்கும்.
தொய்வற்ற திரைக்கதை ரசிகர்களை படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை இருக்கையிலேயே கட்டிப்போட்டிருக்கிறது.
ரத்தம் தெறிக்கத் தெறிக்க இருக்கும் காட்சிகள் ஒவ்வொருவரின் மன அழுத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாடல்கள் பெரிதாக ரசிக்கும்படியாக இல்லை. காட்சிகளின் உணர்வுகளை இறுக்கத்துடன் கொடுத்திருக்கிறது கேமராவின் கண்கள்.
ஏழைகள் என்றாலே திருடுவான் எனும் எண்ணத்தின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் ‘அநீதி’ பேசப்படவேண்டிய நீதி.

Leave a comment