நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது.
தற்போது, படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை துவங்கியுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரப் பயணமாக ஆக.6 ஆம் தேதி இமயமலைக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2010 ஆம் ஆண்டு வரை தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து வந்தார். தற்போது, மீண்டும் இமயமலை செல்ல உள்ளார்.