ஒரு ஓவரில் 7 சிக்சர் – மொத்தம் 48 ஓட்டங்கள்!

ஆப்கானிஸ்தானில் காபூல் பிரீமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஷாஹின் ஹண்டர்ஸ், அபாசின் டிஃபண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அபாசின் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷாஹின் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
அப்போது, தலைவர் செதிகுல்லா அடல் 77 ஓட்டங்களையும், செய்த் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 19 வது ஓவரை, அபாசின் அணியின் அமிர் சாஜாய் வீசினார். முதல் பந்தை நோ பாலாக வீச செதிகுல்லா அந்த பாலில் சிக்சர் அடித்தார். இதையடுத்து வீசிய பந்து வைடுடன், பைஸ் முறையில் பவுண்டரி ஆகவும் மாறியது. தொடர்ந்து, ஃபிரீ ஹிட் பந்தில் சிக்சர் அடித்த செதிகுல்லா, அதன்பின்னர் வீசப்பட்ட அந்த ஓவருக்கான 6 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி அரங்கை அதிரவைத்தார்.
என்ன நடக்கிறது என புரியாமல் பந்துவீச்சாளர் கதிகலங்கி நின்றார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்சர்கள் உள்பட 48 ஓட்டங்கள் கிடைத்தது. இதன் மூலம் ஒரு ஓவரில் 7 ரன்கள் அடித்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார். அதேசமயம், ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை சஜாய் படைத்தார்.
செதிகுல்லாவின் அதிரடி ஆட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது ஷாட்களை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப்போய் உள்ளனர். இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்லா, 56 பந்துகளில் 10 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 118 ஓட்டங்களை விளாசினார்.
இதனல் ஷாஹின் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ஓட்டங்களை குவித்தது. இதை அடுத்து ஆடிய அபாசின் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 121 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. செதிகுல்லா அடல், தனது நாட்டிற்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிதான் அது. அந்த போட்டியில் 11 ஓட்டங்கள் மட்டுமே அடித்த அவர், உள்ளூர் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதால், ஆப்கானிஸ்தான் டி20 அணியில் தனது இடத்தை நிச்சயம் உறுதி செய்வார்.
Madness in Afghanistan’s Kabul Premier League. 🤯🇦🇫
Sediq Atal smashed 48 runs in an over.
👉🏻 6NB, 4W, 6, 6, 6, 6, 6, 6 pic.twitter.com/trXA7LypIg
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) July 29, 2023