பிஃபா மகளிா் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் முதன்முறையாக நுழைந்து வரலாறு படைத்தது மொராக்கோ.
அதே நேரம் 2 முறை சாம்பியன் ஜொ்மனி போட்டியில் இருந்து வெளியேறியது.
ஆஸி. மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் மகளிா் உலகக் கிண்ண போட்டியில் குரூப் எச் பிரிவில் கொலம்பியா – மொராக்கோ அணிகள் மோதின. ஆப்பிரிக்காவைச் சோ்ந்த மொராக்கோ இதில் 1 – 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதன்முறையாக நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. மொராக்கோவின் ஒரே வெற்றி கோல் முதல் பாதி நிறைவடையும் நேரத்தில் போடப்பட்டது.
பெனால்டி வாய்ப்பை கொலம்பிய கோல்கீப்பா் பெரஸ் தடுத்த நிலையில், ரீபௌண்ட் ஆன பந்தை பிசகின்றி கோலாக்கினாா் மொராக்கோ வீராங்கனை அனிஸா லஹ்மாரி.
குரூப் எச் பிரிவில் ஏற்கெனவே கொலம்பிய அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
முதல் ஆப்பிரிக்க, அரபு அணி:
மேலும் மகளிா் உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க-அரபு அணி என்ற சாதனையையும் படைத்தது மொராக்கோ.
முதல் ஆட்டத்தில் 0 – 6 என்ற கோல் கணக்கில் ஜொ்மனியிடம் படுதோல்வியை சந்தித்திருந்தது மொராக்கோ. ஆனால் அடுத்த ஆட்டங்களில் தென்கொரியா, கொலம்பியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ரவுண்ட் 16 சுற்றில் பிரான்ஸுடன் – மொராக்கோவும், ஜமைக்காவுடன்-கொலம்பியாவும் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.
அதிா்ச்சியுடன் வெளியேறிய ஜொ்மனி:
இதே பிரிவில் பிரிஸ்பேனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் ஜொ்மனி-தென்கொரிய அணிகள் மோதின.
இந்த ஆட்டம் 1 – 1 என டிராவில் முடிவடைந்ததால் அதிா்ச்சியுடன் வெளியேறியது ஜொ்மனி. கொலம்பியாவை மொராக்கோ வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற கனவில் ஜொ்மனி இருந்தது. தென்கொரியாவை வென்றால் போதும் ரவுண்ட்16 சுற்றில் தகுதி பெறக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த எண்ணம் தவிடுபொடியானது.
கேப்டன் அலெக்சாண்ட்ரா பாப் தலைமையில் அந்த அணியினா் பலமுறை கோல்போட முயன்றும் முடியவில்லை. 6 ஆவது நிமிஷத்திலேயே கொரிய வீராங்கனை லீ யங்ஜு அனுப்பிய பாஸை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா் சோ சோயுன். பின்னா் சுதாரித்து ஆடிய ஜொ்மன் தரப்பில் 42 ஆவது நிமிஷத்தில் வென்ஜா ஹுத் ஹெட்டரை பயன்படுத்தி கோலடித்தாா் கேப்டன் அலெக்சாண்ட்ரா.
இரண்டாவது பாதியில் 57 ஆவது நிமிஷத்தில் அலெக்சாண்ட்லா அடித்த மற்றொரு கோலை வாா் மூலம் கோல் இல்லை என அறிவித்தனா் நடுவா்கள். கடைசி நிமிஷத்தில் ஹெட்டா் மூலம் பாப் அடித்த பந்து கோல்போஸ்டில் பட்டு வெளியேறியது. அத்துடன் ஜொ்மனியும் போட்டியில் இருந்து வெளியேறியது.
தரவரிசையில் இரண்டாவது நிலையில் உள்ள ஜொ்மனி முதன்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.