Post

Share this post

அங்காடித் தெரு நடிகை அகால மரணம்!

மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அங்காடித் தெரு திரைப்பட நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு மரணம் அடைந்தார்.
அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சிந்து. நாடோடிகள், தெனாவெட்டு, கருப்பசாமி குத்தகைதாரர், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கொரோனா காலத்தில், நடிகை சிந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புற்றுநோய் பரவியதில் ஒரு பக்கம் மார்பகம் எடுக்கப்பட்டது. இதனால் அவரால் 10 முதல் 20 நிமிடங்கள் வரைகூட தொடர்ந்து உட்கார முடியாத நிலை ஏற்பட்டு, இரவு நேரத்தில் படுக்க முடியாதவாறு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
நுரையீரலில் தண்ணீர் சேர்ந்ததால் பின்பக்க முதுகில் தோள் பட்டை எலும்புக்கு கீழ் துளையிட்டு அதனை எடுத்தார்கள். கழிப்பறைக்கு செல்லக்கூட அடுத்தவர் உதவி தேவைப்படும் நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவரின் இன்னொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவிவிட்டது. தான் மருத்துவ செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு வருவதாகவும், நடிகர் விஷால் போன்றோர் உதவி செய்தால் தன்னால் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வர முடியும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனாலும் அவருக்கு அதிக அளவில் உதவிகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு கை முற்றிலுமாக செயலிழந்து படுத்த படுக்கையாக இருந்தார். நாளுக்கு நாள் உடல் நலம் குறைந்து வந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை காலமானார். அவரது மரணம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Leave a comment