தாய்லாந்து தேசத்தில் சுற்றுலாப் பயணியாக சென்ற யூடியூபர் தனது தன்பால் காதலரை துண்டுத்துண்டாக நறுக்கி கடலில் வீசிய சம்பவம் பதைபதைக்க செய்திருக்கிறது.
ஸ்பெயின் தேசத்தை சேர்ந்தவர் டேனியல் சான்சோ. ஸ்பெயின் நடிகர் ரொடால்ஃபோ சான்சோவின் மகனான இவர், பிரபல யூடியூபராக உள்ளார். சமையல் கலையின் அடிப்படையில் இவர் தயாரிக்கும் வீடியோக்களும், அவற்றில் லாவகமாக காய்கறிகளை வெட்டும் வேகமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.
ஆனால் அதே லாவகத்தில், டேனியல் சான்சோ கத்தி கொண்டு தனது ஆண் காதலனை துண்டுத்துண்டாக நறுக்கினார் என்ற செய்தி தாய்லாந்து மற்றும் ஸ்பெயினுக்கு அப்பால், கொலம்பியா தேசத்தையும் பதறச் செய்திருக்கிறது. கொலம்பியாவின் பிரபல பிளாஸ்டிக் சர்ஜனான எட்வின் ஏரியடா என்பவரே, யூடியூபர் டேனியலின் கத்தியில் சிக்கி கொலையாகி, துண்டாடப்பட்டிருக்கிறார்.
தாய்லாந்து தேசம் இயற்கை சூழலுக்கும், பாலியல் தேவைக்கும் புகழ்பெற்றது. அந்நிய செலவாணியை அள்ளித்தருவதால், பாலியல் விடுதிகளையும், பயணிகளையும் அரசே வரவேற்று வசதிகள் செய்துத் தருகிறது. இதன் மறுபக்கத்தில் போதை மற்றும் குற்றச்செயல்களும் அங்கே அதிகரித்து வருகின்றன.
சூப்பர் மூன் கொண்டாட்டத்தை முன்னிட்டு 29 வயதாகும் யூடியூபர் டேனியல் சான்சோவும், 44 வயதாகும் எட்வினும் தாய்லாந்தில் சந்தித்து தங்கள் பாலியல் தேவைகளை தீர்த்துக் கொண்டனர். அப்படியான ஒரு தருணத்தில், சரச வேட்கையில் தனது விருப்பத்துக்கு எட்வின் உடன்படவில்லை என்று எட்வினை டேனியல் தாக்கியிருக்கிறார்.
குளியலறையில் நடந்த இந்த தாக்குதலில் எட்வின் குற்றுயிராய் விழ, அவரை இனிமேல் காப்பாற்ற முடியாது என முடிவு செய்த டேனியல், எட்வினை கொன்று போட்டார். பின்னர் தேவையான பொருட்களை சூப்பர் மார்க்கெட்டிலிருந்து தருவித்து, எட்வின் தேகத்தை 14 பாகங்களாக நறுக்கினார். அவற்றை சேகரித்து, தீவினை சுற்றிப் பார்க்கும் பாவனையில் கடலில் விட்டெறிந்து வந்தார். இடுப்பு மற்றும் தொடை ஆகிய பாகங்களை மட்டும், உள்ளூர் குப்பை மேட்டில் அவர் தூக்கி எறிந்தது வினையானது.
அந்த தடயத்தின் அடிப்படையில் தாய்லாந்து போலீஸார் விரைந்து டேனியலை கைது செய்தனர். தான் செய்த குற்றத்தை டேனியல் ஒப்புக்கொண்டதும், இதர பாகங்களைத் தேடி டைவர்கள் உதவியுடன் தாய்லாந்து காவல்துறை கடலுக்குள் துழாவி வருகிறது. டேனியல் கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவரது யூடியூப் வீடியோக்கள் பிரபலமடைந்து வருகின்றன. அவர் கத்தியை கையாளும் லாவகம் வீடியோத் துணுக்குகளாகவும் பரவி கிலியூட்டி வருகின்றன.