கொழும்பில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிபுணர் குழு இரண்டாவது தடவையாக பேராதனை பல்கலைக்கழக சட்ட வைத்திய பிரிவில் கூடியுள்ளது.
இதற்கமைய நிபுணர் குழு நேற்று (11ஆம் திகதி), இன்று (12ஆம் திகதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13ஆம் திகதி) ஆகிய மூன்று தினங்கள் தினேஷ் ஷாப்டரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிர் மாதிரிகள் தொடர்பான பகுப்பாய்வு, திசுப் பரிசோதனை, ஸ்கேன் அறிக்கை உள்ளிட்ட தரவுகளை மீண்டும் ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, அவரது சடலம் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடம், பேராசிரியர், தடயவியல் மருத்துவத் துறை, சட்ட வைத்தியர் யு.பி.பி. பெரேரா மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் தலைவர் சட்ட வைத்தியர் ரொஹான் ருவன்புர ஆகியோர் விசாரணைக்கு தேவையான தரவுகளுடன் நேற்று காலை பேராதனை பல்கலைக்கழக சட்ட வைத்திய பிரிவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.