‘ஜெய்பீம்’ படத்தில் குறவா் இன மக்களை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகா் சூா்யா மற்றும் இயக்குநா் ஞானவேல் பதிலளிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருந்தது. விமா்சன ரீதியாக இந்தப் படம் வரவேற்பைப் பெற்றாலும் பல விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இந்தப் படத்தில், குறவா் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தை தயாரித்து நடித்த சூா்யா, இயக்குநா் ஞானவேல் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறவா் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவா் முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகாா் அளித்தாா்.
புகாா் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி ஆா்.ஹேமலதா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
அதில், படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூா்யா மீதும், இயக்குநா் த.செ.ஞானவேல் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் இருவரையும் எதிா் மனுதாரா்களாக இணைக்கும்படி உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி இருவரும் இந்த வழக்கில் எதிா் மனுதாரா்களாக சோ்க்கப்பட்டனா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து சென்னை காவல் துறை, நடிகா் சூா்யா, இயக்குநா் ஞானவேல் ஆகியோா் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தாா்.