Post

Share this post

‘படைத் தலைவரை நாங்கள் கொல்லவில்லை’

தங்கள் நாட்டு தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் மரணத்துக்கு தாங்கள்தான் காரணம் என்று கூறப்படுவதை ரஷ்ய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் சனிக்கிழமை கூறியதாவது:
அண்மையில் நடைபெற்ற விமான விபத்து குறித்தும், அதில் வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட பயணிகளின் மரணம் குறித்தும் பல்வேறு ஊகத் தகவல்கள் பரவி வருகின்றன.குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் இந்தத் தகவல்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அவை அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களாகும் என்றாா் அவா். முன்னதாக, யெவ்கெனி ப்ரிகோஷின் சென்ற விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை எனவும், அந்த விமானத்துக்குள் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே அது விழுந்து நொறுங்கியதாகவும் அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்தன.
தனது எதிரிகளை இல்லாமல் செய்யும் ஜனாதிபதி புதினின் நீண்ட கால வரலாற்றைக் கொண்டு பாா்க்கையில், யெவ்கெனி ப்ரிகோஷின் ரஷ்ய அரசால் குறிவைக்கப்பட்டிருப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருப்பதாக அவா்கள் கூறினா்.
இந்த நிலையில், ரஷ்ய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் இவ்வாறு கூறியுள்ளாா். ரஷ்யாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆப்பிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது. மற்ற ரஷ்யப் படையினரை விட வாக்ன் குழுவின் படையினா் அச்சமோ, ஈவிரக்கமோ இல்லாமல் போரிட்டு அதிக செயல்திறனை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
‘ஜனாதிபதி புதினின் துணை இராணுவப் படை’ என்று வா்ணிக்கப்பட்ட வாக்னா் குழு, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய இராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது. எனினும், இந்தப் போரின்போது இராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது. தங்களுக்குப் போதுமான அளவுக்கு ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அளிப்பதில்லை என்று புகாா் தெரிவித்த யெவ்கெனி ப்ரிகோஷின், ராணுவம் தங்கள் மீது தாக்குதல் நடத்தி தங்களது ஏராளமான வீரா்கள் பலியானதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்த நிலையில், இராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23 ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. உக்ரைனிலிருந்து வெளியேறிய அந்தப் படையைச் சோ்ந்தவா்கள் இடையிலுள்ள நகரங்களைக் கைப்பற்றியவாறு தலைநகா் மாஸ்கோவை நோக்கி முன்னேறினா். இது, ஜனாதிபதி விளாதிமீா் புதினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக அறிவித்த ப்ரிகோஷின், ரத்தக் களறியைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தாா். விளாதிமீா் புதின், யெவ்கெனி ப்ரிகோஷின் ஆகிய இருவருக்குமே நெருக்கமான பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டா் லுகஷென்கோ முன்னிலையில் இரு தரப்பினரும் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், யெவ்கெனி ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சியில் ஈடுபட்ட வாக்னா் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக ரஷ்ய அரசு கூறியது.
எனினும், வாக்னா் குழு கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த கடந்த புதன்கிழமை (ஆக. 23), மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த 10 பேரும் உயிரிழந்ததாகவும், விமானப் பயணிகளின் பட்டியலில் யெவ்கெனி ப்ரிகோஷின் பெயா் இருந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் அறிவித்தனா். எனினும், ப்ரிகோஷினின் மரணம் இதுவரை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Leave a comment