Post

Share this post

ஆண் குழந்தையைத் திருடிய தம்பதி – இறுதியில் நடந்த சோகம்!

ரக்சா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிறு கட்டுவதற்காக சகோதரன் வேண்டுமென கோரிய மகளுக்காக, ஆண் குழந்தையைத் திருடிய டெல்லி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி தாகூர் கார்டன் நகரில் வசிப்பவர்கள் சஞ்சய் – அனிதா தம்பதியர். இவர்களுக்கு மகன் – மகள் என 2 வாரிசுகள் இருந்தனர். இவர்களில் 17 வயதாகும் மகன் கடந்தாண்டு விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார். 15 வயதாகும் மகளுடன் வசித்து வந்த தம்பதிக்கு, மகனை இழந்த துயரம் அதிகம் அலைக்கழித்து வந்தது.
இதனிடையே ரக்சா பந்தனை முன்னிட்டு ஊரே ராக்கி கட்டும் வைபவத்துக்கு தயாராகி வந்தது. சகோதரன் அல்லது சகோதரனாக பாவிக்கும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை பெண்கள் கட்டுவதும், பதிலுக்கு பரிசுகளைப் பெறுவதும் ரக்சா பந்தனின் மையமாக நடைபெறும்.
சஞ்சய் – அனிதா தம்பதியின் 15 வயது மகள், ’இந்தாண்டு ராக்கி கட்ட சகோதரன் இல்லையே’ என வருந்திருக்கிறார். சொந்த மகனை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்த தம்பதிக்கு, மகளின் சோகம் அதிகம் பாதித்து விட்டது. மகளைத் தேற்றுவது, மகனை இழந்த சோகத்தில் இருந்து தாங்கள் விடுபடுவது என 2 பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வு ஒன்றை திட்டமிட்டார்கள்.
அதன்படி சட்டா ரயில் சௌக் பகுதியில் சாலையோரம் வசித்து வந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு மாத வயதாகும் ஆண் குழந்தையை நள்ளிரவில் திருடினர். சாலையோரம் வசிப்பவர்கள் என்பதால் காவல்துறையை நாட மாட்டார்கள் என்றும், அப்படியே நாடினாலும் காவல்துறைக்கு இருக்கும் பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் சாலையோரம் வசிப்பவர்களின் புகாருக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள் என்றும் சஞ்சய் – அனிதா தம்பதி கணித்திருந்தது.
ஆனால், அந்த கணிப்பை டெல்லி காவல்துறை பொய்யாக்கியது. ஒரு மாத வயது குழந்தையை காணவில்லை என சாலையோர மக்கள் அளித்த புகார் அடிப்படையில் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்பகுதியின் சுமார் 400 சிசிடிவி பதிவுகளை ஆராய ஆரம்பித்தவர்கள் அப்படியே விசாரணை நூல் பிடித்து, சஞ்சய் – அனிதா தம்பதியை வளைத்தனர். அவர்களிடமிருந்த கடத்தப்பட்ட ஆண் குழந்தையையும் மீட்டனர்.
ரக்சா பந்தனுக்கு ராக்கி கட்ட சகோதரன் வேண்டுமென்ற மகள் ஆசையை நிறைவேற்றவும், சொந்த மகனைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து மீளவும் குழந்தை திருட்டில் ஈடுபட்டதை சஞ்சய் – அனிதா தம்பதி ஒப்புக்கொண்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், கடத்தல் சம்பவத்தில் வேறு ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா என்றும் விசாரித்து வருகின்றனர்.

Leave a comment