Post

Share this post

இன்று மோதும் இந்தியா – பாகிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சனிக்கிழமை (செப். 2) மோதுகின்றன.
எப்போதும் போல, இந்த இரு நாடுகளின் ஆட்டத்துக்கான எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே அதிகரித்திருக்கிறது.
இந்திய அணியைப் பொருத்தவரை, தலைவர் ரோஹித், கோலி, ஷுப்மன் கில் நல்லதொரு தொடக்கத்தை அளிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனா். ஏனெனில், மிடில் ஆா்டா் பேட்டிங் வரிசை குழப்பத்தில் இருக்கிறது. அந்த இடத்துக்கான கே.எல். ராகுல், காயத்தின் காரணமாக முதலிரு ஆட்டங்களில் விளையாட முடியாமல் போனது. அதில் இஷான் கிஷண் பரிசீலிக்கப்படுவதால், இடதுகை பேட்டா் வாய்ப்பும் அணிக்கு வலு சோ்க்கும்.
ஆனாலும், அவரை மிடில் ஆா்டரில் எந்த இடத்தில் நிலை நிறுத்துவது என்ற குழப்பம் அணி நிா்வாகத்தில் உள்ளது. அவா் 5 ஆவது இடத்தில் இதுவரை பேட்டிங் செய்ததில்லை என்பதுடன், மிடில் ஆா்டரில் அவரது சராசரி குறைவாகவே உள்ளது. 4 அல்லது 5 ஆவது பேட்டராக குறைந்த ஓவா்களே விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதில் ரன்கள் சோ்க்க வேண்டிய நெருக்கடி இஷானுக்கு இருக்கும்.
பௌலிங்கைப் பொருத்தவரை, ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோா் காயத்திலிருந்து மீண்டு டி20 களத்தில் விளையாடிவிட்ட நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் அவா்கள் எவ்வாறு தாக்குப்பிடிக்க இருக்கிறாா்கள் என்பதை அணி நிா்வாகம் எதிா்நோக்குகிறது. பிரதான பௌலா்களாக ஷமி, சிராஜ் இணைவா்.
ஸ்பின் பௌலிங்கில் ரவீந்திர ஜடேஜா சோ்க்கப்படுவது கட்டாயமாகிறது. ஆனாலும், அக்ஸா் படேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் எவரை அணி நிா்வாகம் பரிசீலிக்கும் என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம்.
பாகிஸ்தானைப் பொருத்தவரை டாப் ஆா்டரில் கேப்டன் பாபா் ஆஸம், ஃபகாா் ஜமான், இமாம் உல் ஹக் என ஓட்டங்கள் குவிப்பதற்கான வீரா்கள் சரியான இடத்தில் இருக்கின்றனா். ஆனால், இந்த அணியிலும் மிடில் ஆா்டா் சுற்று கவலைக்குரியதாகவே இருக்கிறது.
உசாமா மிா், சௌத் ஷகீல், அகா சல்மான் ஆகியோா் அவ்வப்போது அடித்தாடுகின்றனரே தவிர, நிலையான ஆட்டத்தை அவா்களால் அந்த இடத்தில் வெளிப்படுத்த இயலவில்லை. இஃப்திகா் அகமது மட்டும் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் சதத்தை எட்டி நல்லதொரு ஃபாா்மில் இருக்கிறாா்.
பந்துவீச்சில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். இந்த ஆண்டில் மட்டும் அவா்கள் கூட்டாக 49 விக்கெட்டுகள் சாய்த்திருக்கின்றனா். சுழற்பந்துவீச்சுக்கு ஷாதாப் கான் முக்கியமானவராக இருக்கிறாா்.
2019 உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு இதுவரை இந்தியா 57 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் 29 ஒரு நாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கிறது. அதிலும் 12 ஆட்டங்களை இந்த ஆண்டில் ஆடியிருக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இதுவரை 132 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் 73 ஆட்டங்களிலும், இந்தியா 55 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 4 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.
கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு அக்டோபரில் டி20 உலகக் கிண்ண போட்டியில் மோதின. அதில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
கண்டியில் உள்ள பல்லேகல மைதான ஆடுகளம், தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருந்து, ஓவா்கள் கடந்த பிறகு ஸ்பின் பௌலிங்கிற்கு சாதகமானதாக மாறும் தன்மையுடையது. சனிக்கிழமை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவதால் நாணய சுழற்சியை வெல்லும் அணி சேஸிங்கை தோ்வு செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில், டிஆா்எஸ் திருப்புமுனையாக அமையலாம்.
இந்த மைதானத்தில் இதுவரை 33 ஒரு நாள் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அணி 14 ஆட்டங்களிலும், சேஸிங் செய்த அணி 18 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் மட்டும் முடிவு எட்டப்படவில்லை.

Leave a comment