இடது கை பந்துவீச்சாளர்களால் திணறிய இந்திய வீரர்கள்!

இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிரான இந்திய அணி வீரர்களின் தடுமாற்றம் ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தொடர்கிறது.
இந்திய அணி துடுப்பாட்ட வீரர்கள் இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். குறிப்பாக ஐசிசி நடத்தும் முக்கியத் தொடர்களில் இடது கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது இந்திய அணி வீரர்கள் தடுமாறுகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் ஜான்சனின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறினார்கள். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீர், 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட், 2021 ஆம் ஆண்டு குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் பாகிஸ்தானின் ஷகின் அஃப்ரிடி ஆகியோரின் பந்துவீச்சுக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் திணறினர்.
பவர் பிளே முடிவதற்குள் முன்வரிசை ஆட்டக்காரர்கள் தங்களது விக்கெட்டை இழந்து விடுகின்றனர்.
ஆசியக் கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியிலும் இதே நிலையே தொடர்கிறது. பாகிஸ்தானின் ஷகின் அஃப்ரிடி பவர் பிளேயில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டினை வீழ்த்தினார். இதனால் இந்திய அணிக்கு தொடக்கம் சரியானதாக அமையவில்லை.
இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிரான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இடது கை வேகப் பந்துவீச்சாளர்களிடம் விராட் கோலி இதுவரை 4 முறை ஆட்டமிழந்துள்ளார். இடக்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் இதுவரை 98 பந்துகளை எதிர்கொண்டுள்ள அவர் 87 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட் முறையே 21.75 மற்றும் 88.77 ஆக உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இடது கை வேகப் பந்துவீச்சாளர்களிடம் ரோஹித் சர்மா இதுவரை 6 முறை ஆட்டமிழந்துள்ளார். அவர்களது பந்துவீச்சில் 147 பந்துகளை சந்தித்துள்ள அவர் 138 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட் முறையே 23 மற்றும் 93.87 ஆக உள்ளது. 6 முறை ஆட்டமிழந்ததில் 4 முறை முதல் 5 ஓவர்களுக்குள்ளாகவே ரோஹித் சர்மா ஆட்டமிழந்துள்ளார்.