மாணவர்களின் தற்கொலை எண்ணமும் தீர்வும்!

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்றுவந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் (18), மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அவிஷ்கர் சம்பாஜி காஸ்லே (17) ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி மைய வாராந்திரத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் நீட், ஜேஇஇ போன்ற அனைத்துவிதமான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்குப் புகழ் பெற்றதாகும். இங்குள்ள பயிற்சி மையங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைகளையும் சேர்த்து கோட்டாவில் இந்த ஆண்டில் இதுவரை 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆகும். பிரச்னை பூதாகரமானதையடுத்து, மாநில அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தப் பயிற்சி மையங்களில் அடுத்த 2 மாதங்களுக்கு எந்தவிதமான தேர்வையும் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஓ.பி. புன்கர் உத்தரவிட்டுள்ளார்.
தற்கொலை எண்ணம் உள்ள மாணவர்கள், வகுப்புகளை அடிக்கடி தவிர்ப்பவர்கள், தொடர்ச்சியாக தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள் உள்ளிட்டவர்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது. அத்துடன் இனி எல்லா புதன்கிழமைகளிலும் அரை நாள் வகுப்பு, அரை நாள் உற்சாக நிகழ்ச்சிகள் இடம்பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிபுணர்கள் குழு அமைத்து பாடத் திட்டத்தின் சுமையைக் குறைக்குமாறு பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே தற்கொலை எண்ணத்தைத் தடுக்க பொது மக்களும் ஆலோசனை வழங்கலாம் என மாநில செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் பவானி சிங் தேத்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆய்வு செய்து 15 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் நிரந்தரத் தீர்வைத் தராது என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடு முழுவதுமே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. இதில் சேர்வதற்காகப் பெற்றோர்கள் பலர் கடன் வாங்குவது மாணவர்களுக்கு முதல் நாளிலிருந்தே மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்திலிருந்து பிரிந்து வந்து தனியாக இருப்பது, குறைந்த ஓய்வு – அதிக பயிற்சி, பயிற்சி மையத் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாதது போன்றவை மன அழுத்தத்தைப் பல மடங்கு அதிகமாக்கி விபரீத முடிவை எடுக்க மாணவர்களைத் தூண்டுகின்றன.
கடந்த 2018 முதல் 2023 மார்ச் வரை, நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி-யில் 33 மாணவர்களும், என்ஐடி-யில் 24 மாணவர்களும், ஐஐஎம்-இல் நான்கு மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 11 பேர் மாணவிகள்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 7.4 சதவீதம் மாணவர்கள் எனவும் கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது 32 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது. ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் சராசரியாக 34 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான அல்லது ஒரு குறிப்பிட்ட படிப்புக்கான பிரச்னை அல்ல. இது தேசிய அளவிலான பிரச்னை. படித்தால் மருத்துவம் அல்லது பொறியியல்தான் படிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையை மாணவர்கள் மனதில் பெற்றோர்கள் திணிக்கக் கூடாது.