நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு வழங்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில், ஆலோசனைக்கு பிறகு இறுதியில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.
அதேபோல, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
நடிகர் விஷாலை தொடர்ந்து, நடிகர் தனுஷூக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவருக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது. இறுதியாக, தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்ட சம்பவம், கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடிகர்களின் விளக்கத்தை எதிர்பார்த்து, ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.