நிபா தீநுண்மி (வைரஸ்) தொற்று பரவல் தொடா்பாக மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், அன்றாட நடவடிக்கைகளில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். அவா்களோடு தொடா்பிலிருந்த உறவினா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நிபா தொற்று பாதிப்பால் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், உயிரிழந்தவா்கள், அவா்களது உறவினா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புணே தேசிய தீநுண்மியல் கழகத்துக்கு (என்ஐவி) அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த இருவருக்கும் நிபா தொற்று பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், அவா்களது உறவினா்கள் இருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
5 ஆவது நபராக கோழிக்கோட்டில் பணிபுரியும் 24 வயதுடைய சுகாதாரப் பணியாளருக்கு நிபா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது. இதன்மூலம், 9 வயது சிறுவன் உள்பட 3 போ் நிபா தொற்று பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்தச் சூழலில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நிபா தொற்றுக்காக சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் பரவும் நிபா தீநுண்மியானது அதிக இறப்பு சதவீதம் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது என மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்நிலையில், நிபா தொற்று தடுப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அமைச்சா் வீணா ஜாா்ஜ் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை உரையாற்றினாா்.
அந்த உரையில், ‘நிபா தொற்று பரவல் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால், அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என அவா் கேட்டுக்கொண்டாா்.
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை: நிபா தொற்று பரவலைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (செப். 14) மற்றும் வெள்ளிக்கிழமை (செப். 15) ஆகிய 2 நாள்கள் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கீதா, ‘இந்த 2 நாள்களில் மாணவா்களுக்கு இணையவழியில் வகுப்புகளைக் கல்வி நிலையங்கள் ஏற்பாடு செய்யலாம்’ என அறிவுறுத்தினாா். எனினும், பல்கலைக்கழக தோ்வுகள் வழக்கம்போல் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.