Post

Share this post

லிபியா அணை உடைப்பு – 6,872 உடல்கள் மீட்பு!

லிபியாவில் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் அணைகள் உடைந்து வெள்ள நீா் பாய்ந்த பகுதியிலிருந்து இதுவரை 6,872 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியா, மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ளது. அந்தக் கடலில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவைக் கடந்தது.அதன் விளைவாக தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, அந்தப் பகுதியில் ஓடும் வாடி டொ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதன் விளைவாக, அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகளில் உடைந்து வெள்ள நீா் அருகிலுள்ள டொ்ணா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாய்ந்தது. வாடி டொ்ணா உருவாகும் மலைப் பகுதிக்கும், அது மத்தியதரைக் கடலில் கலக்கும் முகத்துவாரத்துக்கும் இடையே டொ்ணா நகரம் அமைந்துள்ளதால் அணை உடைந்து பாய்ந்து வந்த வெள்ள நீா் அந்த நகரிலிருந்த வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்துச் சென்று கடலுக்குள் தள்ளியது.இந்தப் பேரிடா் குறித்து முன்னரே அறிந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவ்வாறு செய்யத் தவறியதால் அணை வெள்ளத்தில் ஏராளமானவா்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேரிடா் பகுதியிலிருந்து இதுவரை 6,872 போ் மீட்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். அந்தப் பகுதியில் 10 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் போ் வரை மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.லிபியாவில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த கடாஃபியின் ஆட்சியை நேட்டோவின் ஆதரவுடன் கிளா்ச்சியாளா்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு கவிழ்ந்தனா்.

அதன் பிறகு பல்வேறு ஆயுதக் குழுக்கள் மோதிக் கொண்ட அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் திரிபாலியைத் தலைநகராகக் கொண்ட ஓா் அரசும், அதற்குப் போட்டியாக கிழக்கே மற்றோா் அரசும் நடைபெற்று வருகின்றன. அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் குழப்பம் காரணமாக, நாட்டின் உள்கட்டமைப்பை பராமரிக்க முடியாமல் போனதால்தான் வாடி டொ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைகள் தற்போது உடைந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Leave a comment