ஜவான் படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அவரைத்தொடர்ந்து மேலும் மூன்று தமிழ் நடிகைகள் இந்தி படத்தில் நடிக்க கிளம்பியுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மட்டும் நடித்து வந்த நயன்தாரா, ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார். அங்கு அவர் நடித்த முதல் படமே ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. கோலிவுட்டை விட பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வழங்கப்படுவதால், நயன்தாராவை தொடர்ந்து மேலும் மூன்று தமிழ் நடிகைகள் பாலிவுட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனைப்பற்றி பார்க்கலாம்.
நயன்தாராவை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் அங்கு அட்லீ தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகிவிட்டார். அது தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
நடிகை திரிஷா இந்தியில் இதற்கு முன்னர் ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த கட்டா மீதா என்கிற படத்துக்கு பின் பாலிவுட்டில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது அவர் 13 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். அப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளாராம்.
தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சாய் பல்லவி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பேமஸ் ஆனார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல உள்ளாராம். அங்கு சுனில் பாண்டே இயக்க உள்ள இந்தி படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் சாய் பல்லவி. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.