இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் தொடங்க உள்ள நிலையில் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை வென்ற தோனியின் பந்து விழுந்த வான்கடே மைதானத்தில் இருக்கைகளை ஏலம் விட மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரலில், உலக கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த அந்த சிக்ஸர் பந்து விழுந்த இடத்தில் வெற்றிச் சின்ன நினைவகத்தை கட்டி அதைக் திறக்க தோனியை மும்பை கிரிக்கெட் சங்கம் அழைத்திருந்தது. இந்த நினைவிடத்தை அமைப்பதற்காக அங்கு இருந்த நாற்காலிகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
நீக்கப்பட்ட அந்த நாற்காலிகள் இப்போது வெற்றியின் நினைவாக ஏலத்தில் விடப்படவுள்ளது. மேலும் இந்த ஏலத்தில் இருந்து சேகரிக்கப்படும் நிதி, வளர்ந்து வரும் வீரர்களுக்கு உதவித்தொகையாக இருக்கும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம்தெரிவித்துள்ளது.
“இந்த தருணத்தின் பெருமையை நினைவுகூறும் விதமாக, 2011 ஐசிசி உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி வான்கடே மைதானத்தில் சிக்ஸர் பந்து விழுந்த இரண்டு இருக்கைகள் ஏலத்தில் விடப்படும்” என்று கிரிக்கெட் சங்கம் தனது x பக்கத்தில் கடந்த வியாழன் அன்று பதிவிட்டுள்ளது.
“இந்த ஏலத்தில் இருந்து சேகரிக்கப்படும் நிதி வளர்ந்து வரும் வீரர்களுக்கு உதவித்தொகை வழங்க பயன்படுத்தப்படும்,” என்று அது மேலும் கூறியது. 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாக இந்தியா ஆனது. இதன் மூலம் கபில் தேவுக்குப் பிறகு தனது நாட்டிலிருந்து பட்டத்தை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
இந்த தருணம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தாலும், தோனிக்கு, அந்த சிக்ஸர் வெற்றிகரமான தருணம் அல்ல என்று அவர் தனது முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மைக்கேல் ஹஸ்ஸியுடன் உரையாடியபோது வெளிப்படுத்தினார்.
“வெற்றி பெறும் தருணத்திற்கு முன்பான 15-20 நிமிடங்கள் சிறந்த உணர்வாக இருந்தது. எங்களுக்கு அதிக ரன்கள் தேவைப்படவில்லை, பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது, அதோடு நல்ல வானிலையும் இருந்தது. மேலும் அரங்கம் முழுவதும் வந்தே மாதரம் என்று பாடத் தொடங்கியது . அந்த சூழ்நிலையை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம் என்று நான் உணர்கிறேன்.
ஒருவேளை இந்த 2023 உலகக் கோப்பையில், இதேபோன்ற சூழ்நிலை இருக்கலாம். உங்களுக்குத் தெரியும், இது மிகவும் கடினமான சூழல் தான். ஆனால் 2011 ஆம் ஆண்டு போன்ற சந்தர்ப்பம் இருந்தால் மட்டுமே அதை மீண்டும் செய்ய முடியும், ”என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் தோனி கூறியிருந்தார்.