Post

Share this post

காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற கணவனை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்த பெயின்டர் ஆறுமுகம் என்கிற டேவிட் (34). இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கற்பகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இந்நிலையில் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆறுமுகம் பல்லடத்தில் உள்ள தனது பெற்றோருடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கற்பகத்தை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கற்பகம் இதனை ஏற்கவில்லை.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொப்பம்பட்டியில் உள்ள கற்பகத்தின் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து கற்பகத்தினை தன்னுடன் வருமாறு மீண்டும் கூறியுள்ளார். இதனை கற்பகம் மறுக்கவே, ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கற்பகத்தை 17 இடங்களில் குத்திக்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீஸார் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment