நாம் உண்ணும் உணவு நம் உடலின் தசைகள் மற்றும் தோலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது மூளை மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மூளையின் செயல்பாட்டுடன் அதற்கு என்ன தொடர்பு?
இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க சமீபகாலமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நம் வயிற்றுக்குள் என்ன செல்கிறதோ அதன் நேரடி தொடர்பு நம் மூளையில் நடப்பதுடன் இருக்கிறது. நம் வயிற்றில் என்ன நடக்கிறது என்பதை இப்போது நாம் தெரிந்துகொள்வோம்.
உண்மையில் வயிறு என்றால் என்ன? ஹூஸ்டனில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியின் காஸ்ட்ரோஎன்ட்ராலஜி பேராசிரியர் ஜெஃப் ப்ரெடிஸ், வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள எல்லா உறுப்புகளும் வயிற்றின் பாகங்கள். அவை செரிமானத்தில் பங்கு வகிக்கின்றன என்று கூறுகிறார்.
இதில் கல்லீரலும், கணையமும் அடங்கும். இந்த பல மீட்டர் நீளமுள்ள குழாய் பொதுவாக வயிறு என்று அழைக்கப்படுகிறது.
“செரிமான செயல்பாட்டில் குடலின் ஒவ்வொரு பகுதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிறு அமிலத்தின் உதவியுடன் உணவை அரைக்கிறது. பின்னர் அது சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு உணவின் ஊட்டச்சத்துக்கள் செரிக்கப்படுகின்றன,” என்கிறார் ஜெஃப் ப்ரெடிஸ்.
உணவு எப்படி செரிமானம் ஆகிறது?
எது ஜீரணிக்கப்படவில்லையோ அது பெருங்குடலுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு மீதமுள்ள பொருட்களும் தண்ணீரும் செரிக்கப்படுகின்றன.
இதற்குப் பிறகு உடலில் எஞ்சியிருப்பது மல வடிவில் வெளியேற்றப்படுகிறது. இந்த முழு செயல்முறையிலும், இரைப்பை குடல் பாதையில் இருக்கும் எல்லா தசைகள் மற்றும் நரம்புகளும் ஒன்றாக இணைந்து உணவை அரைத்து செரிக்கின்றன என்று ஜெஃப் ப்ரெடிஸ் கூறினார்.
வயிற்றின் வேலை உணவை ஜீரணிப்பது மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதும் ஆகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவின் தேவையற்ற கூறுகள் உடலின் மற்ற பகுதிகளை அடையாமல் இருப்பதை வயிறு உறுதி செய்கிறது.
“சில பாக்டீரியாக்கள் நோயைப் பரப்பலாம். சிலருக்கு பலவீனமான வயிற்று சுவர் இருப்பதன் காரணமாக, நுண்ணுயிரிகள் அல்லது பாக்டீரியாக்கள் வயிற்றில் இருந்து கசிந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவி, அவர்கள் நோய்வாய்ப்படக்கூடும்,” என்று ஜெஃப் ப்ரெடிஸ் குறிப்பிட்டார்.
அதாவது நமது வயிறு, உடலின் மிக முக்கியமான நோய் எதிர்ப்பு சாதனமாகவும் இருக்கிறது. “நம் குடல் ஒரு சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு. இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நம் உணவின் மூலம் வயிற்றை அடைகின்றன,” என்கிறார் அவர்.
“இது இரைப்பை குடல் பாதையில் இருந்து வெளியேறி உடலின் மற்ற பாகங்களுக்குள் நுழைந்தால், அது கணிசமான தீங்கை விளைவிக்கும். எனவே, நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முதல் பாதுகாப்பு சுவர் நமது வயிறு. ஆனால் நமது வயிறு தேவைக்கும் அதிகமாக சுறுசுறுப்பாக இருந்தால் அது வீங்கி விடும்.”
குடலில் கொப்பளங்கள் மற்றும் ஆசனவாயில் வீக்கத்தை ஏற்படுத்தும் க்ரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைடிஸ் போன்ற நோய்களை இது ஏற்படுத்தும்.
”வயிற்றைச் சுற்றியுள்ள நரம்புகள் மூளையுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளன. மேலும் அவை இரண்டிற்கும் இடையே செய்திகள் பரிமாறப்படுகின்றன,” என்று ஜெஃப் ப்ரெடிஸ் தெரிவித்தார்.
வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால் மூளைக்கு அது தெரிந்துவிடும். இந்த இணைப்பு நாம் முன்பு நினைத்ததை விட மிகவும் ஆழமானது என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
வயிற்றுக்கும் மனநோய்க்கும் என்ன தொடர்பு ?
ஜேன் போஸ்டர் ஒரு நரம்பியல் விஞ்ஞானி ஆவார். அவர் டெக்சஸ் பல்கலைக்கழகத்தின் சவுத்வெஸ்டர்ன் மருத்துவ மையத்தில் உளவியல் பேராசிரியராக உள்ளார்.
நமது உடலில் இருக்கும் வேகஸ் நரம்புதான் மூளையை வயிற்றுடன் இணைக்கும் மிக நீளமான நரம்பு என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
“வேகஸ் நரம்பு வயிற்றின் தசைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இருவழி நரம்பு ஆகும். இது மூளையில் இருந்து வயிற்றுக்கும், வயிற்றில் இருந்து மூளைக்கும் சமிக்ஞைகளை அனுப்புகிறது. அதாவது வயிற்றில் இருந்து பெறப்படும் சிக்னல்களுக்கு ஏற்ப மூளை செயல்படுகிறது.
வேகஸ் நரம்பு என்பது மூளைக்கும் வயிற்றுக்கும் இடையே இருக்கும் சமிக்ஞை பரிமாற்றத்தின் ஒரு அதிவேக நெடுஞ்சாலை ஆகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையை மேற்கொண்டனர். வயிற்றின் நிலை நமது மூளையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த சோதனை வெளிப்படுத்தியது.
இந்த பரிசோதனையின் போது பெண்களின் ஒரு குழுவுக்கு சில வாரங்களுக்கு குடிப்பதற்கு புளிக்கவைக்கப்பட்ட பால் கொடுக்கப்பட்டது, இன்னொரு குழுவிற்கு சாதாரண பால் கொடுக்கப்பட்டது.
புளிக்க வைக்கப்பட்ட பாலை அருந்திய குழுவிற்கு செரிமானத்தின் போது மூளை செயல்பாடு சிறப்பாக இருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
குறிப்பாக நமது புலன்களை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி நன்றாக செயல்பட்டது. அதாவது நமது வயிற்றில் இருக்கும் பாக்டீரியா அல்லது நுண்ணுயிரிகள் நமது மூளையின் செயல்பாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
“ப்ரோபயாடிக்குகள் கொண்ட புளிக்கவைத்த பாலை நாலு வாரங்களுக்கு குடித்த பெண்களின் குழுவின் மூளை செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதன் காரணமாக ஒரு புதிய ஆராய்ச்சிக்கான கதவு திறக்கப்பட்டது,” என்கிறார் ஜேன் ஃபோஸ்டர்.
“வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளைக் கொண்டு மனநோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா என்பதை இப்போது கண்டறிய முடியும். உளவியல் துறையில் இது பெரும்பங்கை வகிக்க முடியும்,” என்றார் அவர்.
வயிற்றில் இருக்கும் பாக்டீரியா மன அழுத்தத்தை குறைக்குமா ?
மன உளைச்சல், வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தோம். ஆனால் தற்போது வயிற்றில் இருக்கும் சரியான பாக்டீரியாக்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்பது தெரிய வந்துள்ளது.
மன பதற்றம் அல்லது மன அழுத்தத்துடன் தொடர்புடைய சிறப்பு வகை பாக்டீரியாக்கள் குறித்து ஜேன் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
“சமீபத்தில் மனச்சோர்வடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மனச்சோர்வு அல்லது பதற்றத்தைக்குறைக்க உதவும் சில பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“மனச்சோர்வடைந்தவர்களின் கவலைக்கு இந்த பாக்டீரியா காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதையும் நாம் இப்போது கண்டுபிடிக்கலாம்.”
மனச்சோர்வடைந்த மக்களில் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது ஒரு சிக்கலான பணியாகும். ஆனால் இப்போது ஒரு துப்பு நம் கையில் கிடைத்துள்ளது. இதன் மூலம் பாக்டீரியா அல்லது நுண்ணுயிரி இல்லாததால் அமைதியின்மை அதிகரிக்கிறதா என்பதை நாம் கண்டறியலாம். அது உண்மையானால் அந்த நுண்ணுயிரியின் நுகர்வு சிக்கலை தீர்க்குமா?
“மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு உணவில் இந்த பாக்டீரியா இல்லாததால் மனஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற பல பாக்டீரியாக்கள் உணவில் இருந்து மட்டுமல்லாமல் நமது டிஎன்ஏ காரணமாகவும் நம் உடலில் உற்பத்தியாகின்றன என்பதை எங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளோம்,” என்று ஜேன் ஃபோஸ்டர் குறிப்பிட்டார்.
நம் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் நமது மரபணுக்களுடன் தொடர்புடையதா அல்லது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதா என்பதை நம்மால் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
இருப்பினும், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி, நமது வயிறு மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் எந்தவிதமான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாக்டீரியாக்கள் உதவும் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இப்போதுவரை இல்லை.
குடலின் செயல்பாடு என்ன ?
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 50 பில்லியன் டாலர்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது.
”பலருக்கு செரிமான பிரச்சனைகள் எதுவும் இருப்பதில்லை. இருப்பினும் தாங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அதற்கு சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள்,” என்று நெதர்லாந்தில் உள்ள நிஜோ புட் ரிசர்ச் கம்பெனியின் வணிக மேம்பாட்டு மேலாளர் மார்ட்டின் ஹாம் கூறினார்.
”இரண்டு வகையான சப்ளிமெண்ட்டுகள் உள்ளன. முதலாவது ப்ரோபயாடிக்குகள் – நமது வயிற்றில் உள்ள அதே வகையான பாக்டீரியாக்களை அவை கொண்டுள்ளன.
இரண்டாவது ப்ரீபயாடிக்குகள். நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகளை வளர்க்கும் நார்ச்சத்து கொண்டவை இவை. ஆனால் இந்த சப்ளிமெண்ட்ஸ் நம் வயிற்றின் பெருங்குடலை அடையும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்,”என்று மார்ட்டின் ஹாம், பிபிசியிடம் தெரிவித்தார்.
பெருங்குடலை அடைவதற்கு முன் அவை சிறுகுடலின் வழியாக செல்ல வேண்டும். அதன் நீளம் நமது உடலின் நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம். இந்த சப்ளிமெண்ட்ஸ் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
“செரிமான செயல்முறையின் முதல் நிறுத்தம் வயிறு. பல நுண்ணுயிரிகள் குடலுக்குள் வாழ முடியாது. சிறுகுடலிலும் நமது ஆரோக்கியத்திற்குத் தேவையான நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார் மார்ட்டின்.
இந்த நுண்ணுயிரிகள் வயிற்றில் உணவு அரைப்பதில் இருந்து தப்பித்து சிறுகுடல் வழியாகச் சென்று பெருங்குடலை அதாவது கோலனை அடைந்தாலும், அவை பலனளிக்குமா என்பது கேள்வி.
இதற்கு பதிலளித்த மார்ட்டின் ஹாம், “இது ஒரு சிக்கலான விஷயம். ஆனால் ப்ரோபயாடிக்குகள் மற்றும் ப்ரீபயாடிக்குகளின் நன்மைகள் குறித்து நாங்கள் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம்.
அவை நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன மற்றும் சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை குறைக்கின்றன என்பதை நிரூபித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
தன் செரிமானம் நன்றாக இல்லை என்று ஒருவர் உணர்ந்தால், அவர் ஒரு ப்ரோபயாடிக் அல்லது ப்ரீபயாடிக் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ள நினைத்தால், அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?
“பல ப்ரோபயாடிக்குகள் வயிற்றிலேயே அழிந்துவிடுகின்றன. எனவே நீங்கள் உட்கொள்ள விரும்பும் ப்ரோபயாடிக் நுண்ணுயிரிகள் குடலில் உயிர்வாழ முடியுமா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் எதோ ஒரு ப்ரோபயாடிக்கை உட்கொள்ளமுடியாது. அது பலனளிக்குமா என்பதற்கு ஏதேனும் அறிவியல் அடிப்படை இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும்,” என்று மார்ட்டின் ஹாம் கூறினார்.
நமது மரபணுக்களை நம்மால் மாற்றமுடியாது. சப்ளிமெண்ட் தொடர்பாகவும் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியாவிட்டால், நமது வாழ்க்கை முறையை சீராக்குவதில் கவனம் செலுத்துவதே நம்மிடம் இருக்கும் ஒரே வழி.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பாக்டீரியாின் பங்கு என்ன ?
சரியான உணவைப் பற்றி மேலும் அறிய, சிகாகோ லயோலா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை பேராசிரியரான கெயில் ஹெக்டிடம் பேசினோம்.
வயிற்று நோய்களை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் பற்றிய நிபுணர் அவர். வயிறு ஆரோக்கியமாக இருக்க பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் தேவை என்று அவர் கூறுகிறார்.
“வயிற்றில் இருக்கும் பாக்டீரியாவைப் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் அங்கிருக்கும் பல வகையான நுண்ணுயிரிகள் தனியாக வேலை செய்யாது. அவை ஒன்றிணைந்து வேலை செய்கின்றன.
அவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பங்கு வகிக்கின்றன. இவை இல்லாமல் மனிதர்கள் உயிர் வாழ முடியாது. அதாவது வயிற்றைக்கவனிக்க, அங்கிருக்கும் நுண்ணுயிரிகளை கவனிப்பது முக்கியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“நாம் ஆரோக்கியமாக இருக்க இந்த பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை சார்ந்துள்ளோம். அவற்றை பேணிப்பாதுகாப்பது நமது பொறுப்பு. இந்த நுண்ணுயிரிகள் என்ன சாப்பிடுகின்றன? நம் உணவில் எஞ்சியதை அவை உண்ணும். உதாரணமாக நாம் பீன்ஸ் அல்லது நார்ச்சத்து உள்ள மற்ற காய்கறிகளை சாப்பிடுகிறோம்.
இந்த நார்ச்சத்து முழுமையாக ஜீரணிக்கப்படாதபோது அது பெருங்குடலை அடைகிறது. அங்கும் வாழும் இந்த பாக்டீரியாக்கள் அந்த நார்ச்சத்தில் செழித்து வளர்கின்றன. இதன் ஒரு மோசமான விளைவு என்னவென்றால், அது வாயுவை உருவாக்குகிறது.
ஆனால் இந்த பாக்டீரியாக்கள் சரியாக வளர்ந்து வேலை செய்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி என்று நான் நம்புகிறேன்,” என்று கெயில் ஹெக்ட் கூறினார்.
ஆனால் நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும்போது இது ஏன் நடப்பதில்லை?
“பதப்படுத்தப்பட்ட உணவில் மிகக் குறைந்த நார்ச்சத்தே இருக்கிறது. அதில் சர்க்கரை உள்ளது. அதை நாம் உடனடியாக ஜீரணித்துவிடுகிறோம். நுண்ணுயிரிகளுக்கு எதுவும் மிச்சமாவதில்லை,” என்று கெயில் ஹெக்ட்டின் குறிப்பிட்டார்.
“புரதம் மற்றும் குளுக்கோஸ் நிறைந்த உணவுகள் நம் தசைகளை வளர்க்கின்றன. ஆனால் நாம் சாப்பிடும்போது நம் உடலை மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளின் ஊட்டச்சத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.”
“இதற்காக நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். உணவு எவ்வளவு இயற்கையானதாக உள்ளதோ அது வயிற்றுக்கு அவ்வளவு நல்லது. தயிர் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளும் நல்லது. ஏனெனில் வயிற்றுக்கு தேவையான பாக்டீரியா அதில் உள்ளது.”
உணவு உண்ணும் போது நமக்கு எது பிடிக்கும் என்று மட்டும் சிந்திக்காமல், வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கு எது நல்லது என்று சிந்திக்க வேண்டும்.
“இரண்டு பேருக்கு உணவளிப்பது போல் இதை நான் பார்க்கிறேன். ஒன்று உங்கள் மனித உடல், மற்றொன்று உங்கள் வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரி. மனித உடலுக்கு சக்தி தேவை. அதற்கு புரதம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் வயிற்றில் வளரும் நுண்ணுயிரிகள் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்,” என்று கெயில் ஹெக்ட் கூறினார்.
நமது மன ஆரோக்கியமும் இந்த நுண்ணுயிரிகளுடன் நேரடியாக தொடர்புடையது என்பது தெளிவாகிறது.
உடல் பருமன், நீரிழிவு, அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் இந்த நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை, இந்த நோய்கள் இல்லாதவர்களை விட குறைவாக இருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும் நுண்ணுயிரிகளின் குறைவினால் இந்த நோய்கள் ஏற்படுகின்றனவா அல்லது இந்த நோய்களால் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை குறைகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் ’எல்லா நோய்களின் தொடக்கமும் வயிற்றில் இருந்துதான்’ என்று பல பழங்கால மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே நமது ‘Gut feeling’ அதாவது ’உள்ளுணர்வு’ மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.