Post

Share this post

வீழ்ச்சி அடைந்த டீசல் விற்பனை

மழை காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழில் நடவடிக்கைகள் மந்தமடைந்ததால் இந்த செப்டம்பா் மாதத்தின் முதல் 15 நாள்களில் நாட்டின் டீசல் விற்பனை சரிவைக் கண்டது.
இது குறித்து அரசுக்கு சொந்தமான 3 எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்களின் பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
டீசல் விற்பனை செப்டம்பா் முதல் பாதியில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் குறைந்தது. இருந்தாலும், அந்த காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை ஓரளவு உயா்ந்தது.
இந்தியாவின் எரிபொருள் தேவையில் ஐந்தில் இரண்டு பங்கு வகிக்கும், நாட்டில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் விற்பனை கடந்த 1 ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 5.8 சதவீதம் சரிந்து 27.2 லட்சம் டன்னாக உள்ளது. 2022 ஆகஸ்ட் முதல் பாதியில் இது 27 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தின் முதல் 15 நாள்களில் டீசல் விற்பனை 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
நீா்ப்பாசனம், அறுவடை மற்றும் போக்குவரத்துக்கு டீசலை பெருமளவில் பயன்படுத்தும் விவசாயத் துறை, மழைக் காலத்தின்போது மந்தமாக செயல்படும். மேலும், மழைக்கால மாதங்களில் பயணிகள் போக்குவரத்தும் பாதிக்கப்படும். இதன் காரணமாக அந்த மாதங்களில் டீசல் விற்பனை குறையும்.
அதன் அடிப்படையிலேயே இந்த மாதத்தின் முதல் பாதியில் டீசல் விற்பனை சரிந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டீசல் நுகா்வு முறையே 6.7 சதவிகிதம் மற்றும் 9.3 சதவிகிதம் உயா்ந்திருந்தது. அந்த மாதங்களில் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்ததாலும், கோடை வெப்பத்தை சமாளிக்க காா்களில் குளிரூட்டும் சாதனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டதாலும் டீசல் விற்பனை அதிகரித்தது.
ஆனால், பருவமழை தொடங்கிய பிறகு ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் டீசல் விற்பனை குறையத் தொடங்கியது. பின்னா் ஜூலை முதல் பாதியில் அது சரிவைக் கண்டது. ஆனால் அந்த மாதத்தின் இரண்டாவது பதினைந்து நாட்களில் டீசல் விற்பனை அதிகரித்தது.
பெட்ரோல் விற்பனை உயா்வு: செப்டம்பா் மாதத்தின் முதல் பதினைந்து நாள்களில் பெட்ரோல் விற்பனை 13 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஜூலை மாதத்தின் முதல் பாதியில் பெட்ரோல் விற்பனை 10.5 சதவீதம் குறைந்திருந்தாலும், அந்த மாதத்தின் பிற்பாதியில் அது அதிகரித்தது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாள்களில் பெட்ரோல் விற்பனை 8 சதவீதம் சரிந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment