தென் அமெரிக்க நாடான பெருவில் மலைப் பாதையில் இருந்து பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 25 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
அந்தீசு மலைத்தொடரில் அமைந்துள்ள இரு நகரங்களுக்கிடையே மலைப்பாதை வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த பேருந்து, 200 மீட்டா் பள்ளத்துக்குள் உருண்டு விழுந்தது.
இதில் 2 சிறுவா்கள் உள்பட 25 போ் உயிரிழந்தனா், 34 போ் காயமடைந்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதே பிராந்தியத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 13 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
பெருவில் மோசமான சாலைகள், அளவுக்கு அதிகமான வேகம், போதிய எண்ணிக்கையில் சாலைக் குறியீடுகள் அமைக்கப்படாதது போன்ற காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.