பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான அணி என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அண்மையில் இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான அணி என பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளதுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது : இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மிகப் பெரிய ஆட்டம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மற்ற போட்டிகளைக் காட்டிலும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அகமதாபாத்தில் விளையாடும்போது இரண்டு அணிகளுக்குமே அழுத்தம் என்பது இருக்கும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை. அகமதாபாத்தில் ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில் அவர்களுக்கு மத்தியில் விளையாடுவது இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகளுக்குமே அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.
அணியின் செயல்பாடுகளை வைத்துப் பார்த்தால் நிச்சயமாக பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. நசீம் ஷா இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பெரிய இழப்பு. ஹாசன் அலி மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனுபவம் நிறைந்தவர் என்றாலும் திடீரென சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவருக்கு எளிதானதாக இருக்கப் போவதில்லை என்றார்.
உலகக் கிண்ண தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற அக்டோபர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.