சென்னையில் மர்ம கும்பல் காரை வழிமறித்து தன்னை தாக்கியதாக நடிகர் மோகன் சர்மா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
திரைப்பட நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான மோகன் சர்மா போயஸ் கார்டனில் தனக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை விற்க, கடந்த ஆண்டு தனியார் நிறுவனத்தில் விளம்பரம் செய்திருந்தார்.
இதையடுத்து சேகரன், அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகிய இரண்டு இடைத்தரகர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு வீட்டை விற்பனை செய்தார். இந்நிலையில், வீட்டை விற்பனை செய்த நாள் முதல், இடைத்தரகர்கள் இருவரும் அத்துமீறி நுழைந்து வீட்டில் குடியிருந்து வருவதாக மோகன் சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் மோகன் சர்மாவுக்கும், இடைத்தரகர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி மாலை 7 மணியளவில், மோகன் சர்மா காரில் சென்ற போது அவர் மீது இடைத்தரகர்கள் தாக்கியாக தெரிகிறது.
இதையடுத்து அவர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன் தொடர்ச்சியாக, தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.