இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவானது.
இப்படத்திற்கு முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், ஈழப்போர் பிரச்னையில் தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதால் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனால், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார்.
800 படத்தின் நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இப்படத்தில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கியுள்ளார். தமிழில் எடுக்கப்பட்டு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்தில் அக்டோபர் 6 ஆம் திகதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையேப் பெற்றது.
இந்நிலையில், இப்படம் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 2 ஆம் திகதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.