இலங்கை மத்திய வங்கி தமது நாணய சபையின் அமைப்புத் தொடர்பில் விசேட விளக்கமளித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட சில அரச அதிகாரிகளே பொறுப்பு என கடந்த (14) ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் குறித்த மூவருடன் மத்திய வங்கியின் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ .டி .லக்ஷமன் , நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ் .ஆர். ஆட்டிகல ,முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர்கள் அனைவரும் பொது நம்பிக்கையை மீறியுள்ளதாகவும் அடிப்படை உரிமையை மீறி நாட்டின் பொருளாதாரம் பின்னடைவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இதுத் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாணய சபையின் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தன கடந்த (05.11.2023) ஆம் திகதி முதல் ஆளுநர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதற்கிடையில் கலாநிதி ரணி ஜயமஹாவும் நாணயச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த (12.09.2023) ஆம் திகதி முதல் ஆளுநர் சபை பதவியிலிருந்தது விலகியுள்ளார்.
அதன்படி பொருளாதார நெருக்கடித் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் குறித்து உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னதாகவே நாணய சபையின் உறுப்பினர்களான குறித்த இருவரும் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நாணய சபையின் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக நாணய சபையின் புதிய உறுப்பினர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.