ரயில்வே தண்டவாளத்தில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22). இவர் தனியார் கேபிள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு டிக் டாக் ரீல் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
இதனிடையே குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரயில்வே நிலையம் அருகே நண்பர்களுடன் சென்ற அவர் அங்கே ரயில்வே தண்டவாளத்தில் செல்பி எடுத்துக்கொண்டிருந்த்தாக கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அவர்களது நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.