OOSAI RADIO

Post

Share this post

பூமியை போன்ற ஏலியன்களின் கிரகம் கண்டுபிடிப்பு!

உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது.

சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.

இதுவரை ஏவப்பட்டவற்றில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளன. K2-18b கிரகம் பலவகையிலும் பூமியை ஒத்துள்ளது.

பூமியின் அளவில் 2.6 மடங்கு பெரிதான K2-18b, பூமி போன்றே கடல்கள் சூழ அமைந்துள்ளது. கூடவே இந்த கிரகம் உயிர்கள் வாழத் தகுதியானது என்பதை நிரூபிக்கும் தரவுகளும் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன.

இவை உலகம் முழுக்க விண்வெளி அறிவியலாளர்களை K2-18b திசைக்கு திருப்பியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கிரகத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டாலும், அண்மை ஆய்வுகள் அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் உறுதிசெய்து வருகின்றன.

குறிப்பாக உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட ஆய்வுகள் மேற்படி கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு இருப்பை உறுதிப்படுத்த முயன்று வருகின்றன.

அடுத்த 6 மாதங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்றும் நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருக்கும் ஏலியன்கள் அல்லது ஏதோவொரு உயிர்களை, மேலும் நெருக்கமாக ஆராய்வதற்கு பூமிக்கும் K2-18b கிரகத்துக்கும் இடையிலான தொலைவு பெருந்தடையாக உள்ளது.

124 ஒளியாண்டுகள் தொலைவு என்பது, K2-18b கிரகத்தை நோக்கி பயணம் மேற்கொள்வதில் மனிதனின் அற்பமான ஆயுளோடு ஒப்பிடுகையில் மிகப் பிரம்மாண்டமானது.

மணிக்கு 38,000 மைல் வேகத்தில் சீறும் வாயேஜர் விண்கலத்தில் ஏறி விரைந்தாலும் கூட, அந்த கிரகத்தை அடைய சுமார் 22 லட்சம் ஆண்டுகள் ஆகும். தலைசுற்றச் செய்யும் இந்த தொலைவுதான் K2-18b ஏலியனுக்கும் நமக்கும் இடையே பெரும் தடையாக இருக்கிறது.

இதற்கு தீர்வு தரும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டால் அங்கு செல்ல முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter