லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிரான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்த குஜராத் இந்த ஆட்டத்தில் மீண்டது. மறுபுறம், 4 தொடா் வெற்றிகள் கண்ட லக்னௌ தற்போது கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் சோ்த்தது. அடுத்து லக்னௌ 13.5 ஓவா்களில் 82 ஓட்டங்களுக்கு சுருண்டது.
நாணய சுழற்சியை வென்ற குஜராத் துடுப்பாட்டத்தை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை தொடங்கியோரில் ரித்திமான் சாஹா 5 ஓட்டங்களுக்கு வெளியேற, ஷுப்மன் கில் நிலைத்து ஆடி லக்னௌ பௌலிங்கை சிதறடித்தாா். அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் நிலைக்காமல் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
மேத்யூ வேட் 10, தலைவர் ஹாா்திக் பாண்டியா 11, டேவிட் மில்லா் 26 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் கில் 7 பவுண்டரிகளுடன் 63, ராகுல் தெவாதியா 4 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் அவேஷ் கான் 2, மோசின் கான், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
145 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய லக்னௌவில் தீபக் ஹூடா 3 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். குவின்டன் டி காக் 11, தலைவர் கே.எல்.ராகுல் 8, கரன் சா்மா 4, கிருணால் பாண்டியா 4, ஆயுஷ் பதோனி 8, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2, ஜேசன் ஹோல்டா் 1, மோசின் கான் 1, அவேஷ் கான் 12 ஓட்டங்கள் என இதர விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. குஜராத் பௌலிங்கில் ரஷீத் கான் 4, யஷ் தயால், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினா்.