ஒரு வருடத்திற்குள் அதிகரித்த ரூபாவின் மதிப்பு!
கடந்த 2001 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அடுத்து தற்போதைய ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஒரு வருடம் செல்வதற்குள் நாட்டின் பொருளாதாரம் சாதகமாக நிலைக்கு மாறியது. ரூபாயின் மதிப்பு அதிகரித்தது என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளதார நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதற்கு முன்னரும் 2001 ஆம் ஆண்டில் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு நாடு வங்குரோத்து நிலைக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. பொருளாதாரத்தின் வளர்ச்சி – 1.4 ஆகக் குறைந்தது. வட்டி விகிதம் அதிகரித்தது. பணவீக்கம் அதிகரித்தது. மாற்று விகிதம் உயர்ந்தது. அந்த நாட்களிலும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இருந்தது.
பொருளாதாரத்தை பராமரிப்பது கடினமாக இருந்தது. எனவே நாம் அந்த அரசாங்கத்தை விட்டு விலகி ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தோம்.
நான் பிரதி நிதி அமைச்சராகவும், கிராமிய பொருளாதாரத்திற்கான அமைச்சரவை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டேன். வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் விவசாய அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க போன்றோரும் செயற்பட்டனர்.
அந்தப் பொருளதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காகத்தான் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2003ஆம் ஆண்டின் 3ம் இலக்க அரச நிதி முகாமைத்துவப் பொறுப்புச் சட்டத்தைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்தச் சட்டத்தில் மூன்று பிரதான விடயங்கள் சட்டமாக்கப்பட்டன.
ஒரு வருடம் செல்வதற்குள் நாட்டின் பொருளாதாரம் சாதகமான நிலைக்கு மாறியது. ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. அந்தச் சட்டத்திற்கு அமைய 2006ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டாகும் போது கடன் அளவு மொத்த தேசிய உற்பத்தியில் 65 வீதத்திற்கு குறைய வேண்டும் என நிறைவேற்றப்பட்டிருந்தது.
அவ்வாறே 2006ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட இடைவெளியை மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாகப் பேணி அதன் பின்னர் தொடர்ச்சியாக அதனை அரசாங்கங்கள் முன்னெடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இன்னும் பல விடயங்கள் அதில் இருந்தன. அந்தச் சட்டம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாடு வங்குரோத்து அடைந்திருக்காது. இதுதான் உண்மை.
துரதிர்ஷ்டவசமாக அந்த அரசாங்கத்தினால் 2004இல் மீண்டும் அதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. பின்னர் வந்த அரசாங்கம் இந்தச் சட்டத்தை மாற்றியதன் காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலையை நோக்கி விரைந்தது என குறிப்பிட்டுள்ளார்.