பாலிவுட் திரையுலகைச் சோ்ந்த பிரபல நடிகா் ஷாருக் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாள்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் வேகம் சற்று அதிகமாகவே உள்ளது. இது அங்குள்ள திரை பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கெனவே நடிகா்கள் காா்த்திக் ஆா்யன், ஆத்யா ராய் கபூா் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இப்போது ஷாருக் கான், கத்ரீனா கைஃப் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு பாதிப்பு மிதமான அளவில் உள்ளதால், மருத்துவா்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரும் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
மகாராஷ்டிர சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரான ஃபட்னவீஸுக்குக் கடந்த 2020 அக்டோபரிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.