கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியில் உணவு கேட்ட குழந்தைக்கு கையில் பட்டைப் பட்டையாக சூடு வைத்த வளர்ப்புத் தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வாடி நகரத்துக்கு அருகே நல்வார் ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
5 வயது சிறுமியின் அழுகைக் குரல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, குழந்தையின் கையில் சூடு வைத்து, அந்த வலியால் குழந்தை துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், குழந்தையை பராமரிப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். குழந்தை பராமரிப்பு இல்ல ஒருங்கிணைப்பாளர், கூறுகையில், கலபுராகியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
திப்பண்ணாவின் முதல் மனைவி இறந்துவிட்டதால், அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த 5 வயது சிறுமியை இரண்டாவது மனைவியிடம் விட்டுவிட்டு வேலை நிமித்தமாக புனே சென்றுவிட்டார் திப்பண்ணா.
இதையடுத்து, அப்பெண், 5 வயது குழந்தையை கடுமையாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார், செவ்வாய்க்கிழமை காலை, குழந்தை உணவு கேட்டு அழுததால், ஆத்திரமடைந்தவர், குழந்தையின் கையில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் குழந்தையை கட்டிலுடன் சேர்த்து கட்டிவைத்துள்ளார். தொடர்ந்து அழுகுரல் கேட்டதால் பக்கத்து வீட்டு பெண் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கட்டிலுடன் சேர்த்து கட்டிவைத்த குழந்தையின் கைகளில் சூடு வைக்கப்பட்டு, வேதனையில் குழந்தை துடிதுடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அப்பெண், குழந்தையை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றுள்ளார். இது குறித்து காவலர்கள் கூறுகையில், வளர்ப்புத் தாய் உடனடியாக கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர்.