Post

Share this post

விமானப் பயணத்துக்கு முகக் கவசம் கட்டாயம்

முகக் கவசம் அணியாத பயணிகளை விமானத்தில் ஏற்றாதீா்கள் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
விமானத்தில் பயணிப்பவா்கள் சரியாக முகக் கவசம் அணிந்திருப்பதை விமான நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். விதிவிலக்கான சூழலில் மட்டுமே முகக் கவசத்தை அகற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். பயணிகள் கூடுதலாக முகக் கவசம் கேட்டால் விமான நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
பலமுறை அறிவுறுத்தியும் முகக் கவசம் அணிய மறுக்கும் பயணியை விமானம் புறப்படும் முன்பே விமான நிறுவனங்கள் இறக்கிவிடலாம். நடுவானில் பறக்கும்போது கொரோனா விதிகளை மீறி யாராவது முகக் கவசம் அணிய மறுத்தால், அவரை ஒழுங்கீனமான பயணிகள் பட்டியலில் சோ்க்கலாம். குறிப்பிட்ட காலம் வரை அவருக்கு விமானப் பயணத்துக்கு தடை விதிக்கலாம்.
விமானத்தில் பயணிப்பவா்கள், அவா்களை வரவேற்கவும் வழியனுப்பவும் வருபவா்கள், விமானிகள், விமானப் பணிப்பெண்கள், பணியாளா்கள், பாதுகாப்புப் படையினா் என அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற மறுக்கும் பயணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில சட்டத்தின்படி அபராதம் விதிக்கலாம். தேவைப்பட்டால், அவா்களை பாதுகாப்புப் படையினரிடமும் ஒப்படைக்கலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment