சுறா கொடூர தாக்குதல் – பட நடிகர் மரணம்
நடிகர் பெர்ரி மரணம் அடைந்ததும், உடனடியாக அந்த பகுதியில் சுறா தாக்குதலுக்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
பிரபல நடிகர் ஜானி டெப் நடிப்பில் வெளியான படம் பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்: ஆன் ஸ்டிரேஞ்சர் டைட்ஸ். இந்த படத்தில் அவருடன் நடித்தவர் தமயோ பெர்ரி (வயது 49).
இவர் அலைசறுக்கு விளையாட்டில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இதில், 8 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவர், புளூ கிரஷ் மற்றும் சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: புல் திராட்டில் ஆகிய படங்களிலும் வேடமேற்று நடித்துள்ளார். இதேபோன்று, நீரில் எவரேனும் தவறி விழுந்து விட்டால் அவரை நீந்தி சென்று, மீட்டு கரைக்கு கொண்டு வரும் உயிர்காப்பாளர் பணியையும் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், ஹவாய் தீவில் உள்ள உவாஹு பகுதியில் கோட் தீவுக்கு அருகே அவர் சென்றுள்ளார். அப்போது, அவரை சுறா ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. இதனை கவனித்த ஒருவர் அவசரகால சேவை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
உடனடியாக அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பெர்ரியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. அவருடைய உடலில் சுறா மீன் கடித்ததற்கான பல்வேறு தடயங்கள் காணப்பட்டன. நடிகர் பெர்ரி மரணம் அடைந்ததும், உடனடியாக அந்த பகுதியில் சுறா தாக்குதலுக்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், அவருடைய ஒரு கை மற்றும் ஒரு கால் காணாமல் போயுள்ளன என கூறப்படுகிறது. அவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை முதல் சமுத்திர பாதுகாப்பு துறையில் தன்னுடைய பணியை தொடங்கி தொடர்ந்து அதில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த பகுதியில் ஏற்பட்ட 2-வது சுறா தாக்குதல் இதுவாகும். இதனால் இந்த பகுதியில் அலைசறுக்கு மற்றும் கடற்கரைக்கு செல்பவர்கள் இடையே பதற்றம் மற்றும் அச்சநிலை ஏற்பட்டு உள்ளது.