சண்டைக்கு காரணமான சிக்கன் லெக் பீஸ்! (Video)

திருமணத்தில் பரிமாறிய சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விருந்தினர்கள் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிக்கன் பிரியாணியில் ஒரு லெக் பீஸ்கூட இல்லை என்று மாப்பிள்ளையின் உறவினர்கள் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். வார்த்தை தகராறு முற்றி இரு வீட்டாரும் சண்டை போடத் தொடங்கியுள்ளனர்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாறிமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், அந்த இடமே கலவர பூமியாக மாறியுள்ளது. கைகளில் தாக்கிக் கொண்டது மட்டுமின்றி, மண்டபத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள் என கைகளில் கிடைப்பதைக் கொண்டு அடித்துக் கொண்டதில் பலர் காயமடைந்தனர்.
இந்த காட்சிகளை திருமணத்துக்கு சென்றவர்களில் ஒருவர் விடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த காணொலி வேகமாக பரவி வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும், விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளூர் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.