ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்படமாட்டாது!
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு தெளிவான தீர்ப்பை வழங்கியிருப்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட வாய்ப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனாதிபதியும் அவரது குழுவினரும் முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கக் கோரிய போது, உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியது.
இதன்படி அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி மற்றும் அவரது குழுவின் சதிகள் அல்லது தந்திரோபாயங்களை தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்
ரணில் விக்ரமசிங்கவின் சதிகளை தோற்கடிப்பது மட்டுமன்றி ரணிலை ஒட்டுமொத்தமாக தோற்கடிப்போம் என அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
எனவே அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மக்கள் அடிபணிந்து விடக்கூடாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Courtesy: Sivaa Mayuri