ஆயிரம் கோடியை நெருங்கும் உலக மக்கள் தொகை!

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் சமீபத்திய அறிக்கை உலக மக்கள் தொகையானது 820 கோடியில் இருந்து 1030 கோடியை அடையும் என்று கணித்துள்ளது.
வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் (World Population Prospects) என்ற தலைப்பில் உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 2080ம் ஆண்டு மக்கள் தொகை உச்சத்தை தொட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளது.
இன்று பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர்வாழ்வார்கள். இது 1995ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.4 ஆண்டுகள் அதிகம் என்றும் குறிப்பிடட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் வெளியிடும் உலக மக்கள் தொகை தரவு, பிறப்பு – இறப்பு விகிதங்கள், மற்றும் மக்கள் தொகை சார்ந்த இதர கணக்கெடுப்புகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வு அறிக்கையை தொடர்ச்சியாக, கடந்த ஐம்பது ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது ஐ.நா.
இந்த உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது என்பது துல்லியமற்ற அறிவியல் செயல்முறை என்று விளக்கமளிக்கிறார் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யும் ஜாகுப் பிஜாக்.
மக்கள் தொகை ஆய்வுகளில் பயிற்சிபெற்ற பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான பிஜாக், சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். கணிக்கப்படும் எண்கள் நிச்சயமற்ற தன்மையை கொண்டிருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்று சுட்டிக்காட்டுகிறார் பிஜாக்.
“நாம் மாயாஜால பந்தை வைத்து இதைக் கணிப்பதில்லை,” என்கிறார் வாஷிங்டன் டிசியில் உள்ள பாப்புலேஷன் ரெஃபெரன்ஸ் பீரோ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் டாக்டர் தொஷிகோ கனேடா.
அதே சமயத்தில் எந்த பணியும் செய்யாமல் வெறுமனே மக்கள் தொகை இவ்வளவு இருக்கும் என கணிக்கிறார்கள் என்றும் நாம் அர்த்தம் கொள்ளக் கூடாது என்கிறார் டாக்டர் கனேடா.
எங்களின் அறிவு, அனுபவம், கைவசம் இருக்கும் தரவு என அனைத்தின் அடிப்படையில் தான் இந்த முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இது ஒரு சவாலான பணி என்றும் மேற்கோள் காட்டுகிறார் டாக்டர் கனேடா.
மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்பவர்களான டெமோகிராஃபர்கள் (Demographers) தொடர்ச்சியாக தங்களின் கணிப்புகளை புதுப்பித்து வருகின்றனர். உதாரணமாக, 2100-ன் மக்கள் தொகை பற்றிய கணிப்பை ஐ.நா தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த மதிப்பானது ஒரு தசாப்தத்திற்கு முன்பு நாம் கணித்த மக்கள் தொகையைக் காட்டிலும் 6 சதவீதம் குறைவாக உள்ளது.
தரவுகள் இப்படி முன்னுக்குப் பின்னாக இருப்பினும் எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்க இந்த தரவுகளை அரசாங்கங்களும் கொள்கை அளவில் முடிவு எடுப்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் ஏற்கனவே மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்கிறது வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் 2024.
இருப்பினும் மக்கள் தொகை, 126 நாடுகளில் அடுத்த முப்பது ஆண்டுகள் வரை அதிகரிக்கும். ஏற்கனவே மக்கள் தொகையை அதிகமாக கொண்டுள்ள இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இதில் அடக்கம்.
கொரோனாவுக்கு பிறகு மக்களின் ஆயுட்காலம் மீண்டும் அதிகரித்துள்ளது என்பதையும் காட்டுகிறது இந்த அறிக்கை.
உலக அளவில், இன்று பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 ஆண்டுகள் உயிர்வாழ்வார்கள். இது 1995ம் ஆண்டு இருந்த சராசரி ஆயுட்காலத்தைக் காட்டிலும் 8.4 ஆண்டுகள் அதிகம்.
மேலும், இறப்பு விகிதம் குறைகின்ற போது, 2054ம் ஆண்டுவாக்கில் மனிதர்களின் ஆயுட்காலமானது 77.4 ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் ஐ.நா கணித்துள்ளது.
உலக நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அங்கோலா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, நைகர், சோமாலியா போன்ற நாடுகளில் அடுத்த முப்பது ஆண்டுகளில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாடுகளில் மக்கள் தொகை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நாவின் அறிக்கை, சில நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு புலம்பெயரும் மக்கள் தொகையும் ஒரு முக்கிய காரணம் என்று கூறுகிறது.
19ம் நூற்றாண்டில் அதிக மக்கள் தொகை கொண்டிருந்த நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, ரஷ்யா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை மிக முன்னதாகவே உச்சத்தை அடைந்துவிட்டது என்றும், அதில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது அறிக்கை.
சில நாடுகளில் நிலையான மக்கள் தொகை வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர்தல் நிகழ்வு 2054ம் ஆண்டுக்கு பிறகு உச்சத்தை தொடும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவற்றில் ஆஸ்திரேலியா, கனடா, கத்தார், சவுதி அரேபியா, அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும்.
மக்களின் புலப்பெயர்வு தற்போது அதிகரித்து வருகிறது என்று கூறும் பிஜாக், “புலம் பெயர்ந்தவர்கள் பற்றிய தரவுகள் அதிகம் இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மட்டுமே அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்,” என்று கூறினார்.
வெகுசில நாடுகள் மட்டுமே கணக்கெடுப்புகள் அல்லது மக்கள்தொகை பதிவேடுகளைப் பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற மிகவும் வளர்ந்த நாடுகளில் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.
மேலும் சில நாடுகள் “அலைபேசி லொக்கேட்டர்கள் போன்ற மாற்று முறைகளை பயன்படுத்த முயல்கின்றன. ஆனால் இது செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு நன்றாக மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்தத் தரவை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்,” என்கிறார் பிஜாக்.
கருவுறுதல் விகிதங்களை விட மிக வேகமாக மாறக்கூடியது என்பதால், இடம்பெயர்வு முறைகளை கண்காணித்தல் அவசியமாகிறது என்கிறார் டாக்டர் கனேடா.
“கருவுறுதல் விகிதங்களை மிகக் குறைவாக கொண்டுள்ள நாடுகளில் கூட, அவ்விகிதம் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அவ்வளவு வேகமாக அத்தகைய மாற்றங்கள் அரங்கேறாது. ஆனால் புலம் பெயர்தல் அப்படி இல்லை. போர் அல்லது இயற்கை சீற்றங்கள் காரணமாக ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்,” என்றும் கூறுகிறார் கனேடா.
ஆனால், சர்வதேச அளவில் நடைபெறும் புலம்பெயர்வு நிகழ்வை எளிமையான காரணியாக பார்க்கக் கூடாது என்கிறார் கிளேர் மெனோசி. அவர் ஐ.நா.வின் மக்கள்தொகைப் பிரிவின் மக்கள்தொகைப் பகுப்பாய்வுதுறை தலைவராக பணியாற்றுகிறார். உலகளாவிய அதே நேரத்தில் ஈடுகட்ட முடியாத மக்கள்தொகை மாற்றத்திற்கு ஒற்றை காரணமாக, மக்கள் தொகை சரிவையோ, மக்கள் தொகையின் நீண்ட ஆயுட்காலத்தையோ முன் வைக்க இயலாது என்கிறார் அவர்.
கொள்கையை அறிவிக்கவும், வகுக்கவும் மக்கள் தொகையை கணக்கெடுக்கும் செயல்பாடானது வரலாற்றில் வெகு காலமாக நடந்து வருகிறது.
டெமோகிராஃபர்கள் இந்த நடைமுறை குறைந்தபட்சம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயலில் உள்ளது என்று நம்புகின்றனர். இன்று ஈராக்காக இருக்கும் அன்றைய மெசபடோமியாவில் பாபிலோனியன் அரசால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக நம்பப்படுகிறது.
மக்கள் தொகையை கணக்கெடுக்கும் நுட்பம் வெகுதூரம் வந்துவிட்டது. ஆனால் டெமோகிராஃபர்களின் வேலை தான் எளிமையானதாக இன்றும் மாறவில்லை.
மிகவும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, அரசாஙம் மீது குறைந்து வரும் நம்பிக்கை, தனியுரிமை பற்றிய கவலை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று டாக்டர் கனேடா கூறுகிறார்.
வளர்ந்த நாடுகளில் தரவு சேகரிப்பு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் டாக்டர் கனேடா. மக்கள்தொகை தரவுகளை சேகரிப்பதற்கான செலவு ஏழை , நடுத்தர நாடுகளுக்கு இன்னும் சவாலாக உள்ளது.
இருப்பினும், தரவுகளை வலுப்படுத்த முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் 32 டாலர் மதிப்பிலான பொருளாதார நன்மைகளை வழங்குகிறது என்று ஐ.நா கூறுகிறது.
மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் இருந்து தரவுகளை சேகரிக்க முன்னுரிமை அளிக்கவேண்டுமென வலியுறுத்துகிறது ஐ.நா. உதாரணமாக, இளம் தாய்மார்கள் (வயது 15-19) பற்றிய குறைவான தரவுகளைக் கொண்ட இடங்களில் தான் இளம்வயது பிரசவங்கள் பொதுவாக அதிகம் நடைபெறும் இடங்களாகும்,” என்று மேற்கோள்காட்டுகிறது ஐ.நா.
அதிகாரப்பூர்வ ஐ.நாவின் மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளின் 28வது பதிப்பு தான் சமீபத்திய வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் அறிக்கை. 1950-2023 ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட 1,700-க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளிலிருந்தும், முக்கிய பதிவுகள் மற்றும் 2,890 தேசிய பிரதிநிதித்துவ மாதிரி ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இன்ஸ்டிட்யூட்ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவாலியூஷன் (Institute of Health Metrics and Evaluation (IHME)) மற்றும் வியன்னாவில் உள்ள IIASA-Wittgenstein மையம் ஆகியவை உலக மக்கள்தொகை கணிப்புகளை தயாரித்து வெளியிடும் இரண்டு இதர முக்கிய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.