Post

Share this post

என்ஜாயி எஞ்சாமி – புதிய சர்ச்சை!

என்ஜாயி எஞ்சாமி பாடல் தொடர்பாக அறிவின் குற்றச்சாட்டுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கமளித்துள்ளார்.
என்ஜாயி என்ஜாமி பாடலானது சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2020 துவக்கவிழாவில் பாடப்பட்டது. பாடலை பாடகி தீ மற்றும் பாடினார். அறிவு பாடாதது பல சர்ச்சைகளை உருவாக்கியது.
அவர் பாடாதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்ப, அவர் அமெரிக்கா சென்றிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக அறிவு, நான் கிட்டத்தட்ட 6 மாதங்களாக தூங்காமல் உழைத்த பாடல் இது. நீங்கள் தூங்கும்போது உங்களது செல்வத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். ஆனால் நீங்கள் முழித்திருக்கும்போது யாராலும் அபகரிக்க முடியாது. இறுதியில் உண்மை வெல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக நீண்ட அறிக்கையை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
அவரது பதிலில், நான் என்ஜாயி என்ஜாமி பாடலுடன் எனது பயணம் குறித்து பேச விரும்புகிறேன். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் நானும் தீயும் நமது முன்னோர்கள் பற்றியும் இயற்கையைக் கொண்டாடுவது பற்றியும் ஒரு தமிழ் பாடல் உருவாக்குவது என முடிவெடுத்தோம்.
பிறகு நான் என்ஜாயி எஞ்சாமி பாடலை இசையமைத்து, இணைந்து பாடி உருவாக்கினேன். மேலே சொன்ன எனது பணிக்காக பாடலில் எனது பெயர் தயாரிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டது. உலக அளவில் தனிப்பாடல்களை இசையமைப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.
தீ, அறிவு மற்றும் நான் மூவரும் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பு காரணமாகவும், தனிப்பாடல்கள் மீது கொண்டுள்ள காதல் காரணமாகவும் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தோம்.
தீ மற்றும் அறிவு இணைந்து பாட சம்மதித்தார்கள். மேலும் தீ மற்றும் அறிவு பாடல் உருவாக்குவதிலும் பங்கு பெற்றார்கள். தீ அவர் பாடல் வரிகளில் சிலவற்றை இசையமைத்தார். அறிவு பாடல் எழுத ஒப்புக்கொண்டார். நான் பாடலின் பிற பகுதிகளையும் அறிவு பாட வேண்டிய பகுதிகளையும் இசையமைத்தேன்.
எங்கள் குழு இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி தெரிவிக்கிறது. அறிவுடன் இயக்குநர் மணிகண்டன் இணைந்து பல மணி நேரங்கள் செலவிட்டு பாடல் வரிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை கூறினார். இந்த பாடல் தொடர்பாக பல உண்மை சம்பவங்களை அறிவுக்கு கூறினார். என்ஜாயி எஞ்சாமி பாடல் மணிகண்டனின் கடைசி விவசாயி படத்தின் பாதிப்பில் உருவானது.
பாடலில் வரும் ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த தாத்தாக்கள், பாட்டிகளின் பங்களிப்பில் உருவானது. அவர்களின் வேலையை பெருமைப்படுத்திய அறிவுக்கு நன்றி. பந்தலுல பாவக்கா என்பது என்னுடைய விருப்பமான ஒப்பாரி பாடல்.
என்னுடைய பாடல்களான ரகிட ரகிட, அம்மா நா நா, என்னடி மாயாவி போன்ற பாடல்களின் சில குறிப்பு வார்த்தைகளை பயன்படுத்துவேன். என்ஜாயி என்ஜாமி வார்த்தையும் அதில் ஒன்று. அறிவு அதனை அழகாக வடிவமைத்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
30 மணி நேரத்தில் பாடலின் உருவாக்கி, பாடல்வரிகளுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாடல் படமாக்குவதற்கு சில மணி நேரங்களே இருந்தபோது எங்களுடைய பணி மகிழ்ச்சியாக, தன்னிச்சையாக நடைபெற்றது.
இந்தப் பாடலின் வருமானம், பாடலின் உரிமை குறித்து நான் வெளிப்படையாக இருக்க விரும்பி எனக்கும், அறிவுக்கும், தீக்கும் பகிர்ந்தளித்தேன். நான் கலைஞர்கள் பக்கம் நிற்க விரும்பி பாடலுக்கான பங்களிப்பாளர்களாக அறிவு மற்றும் தீயின் பெயரை எல்லா தளங்களிலும் குறிப்பிட்டேன்.
என்ஜாயி எஞ்சாமி பாடல் வெளியீட்டு விழாவில் அறிவு குறித்து நான் பேசியது ஒரு சான்று. செஸ் ஒலிம்பியாட் 2022 ல் அறிவு பங்கேற்காததற்கு காரணம் அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்பதே. அவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை அறிவு சிறந்த கலைஞர். அறிவின் மிகச்சிறந்த பணியாக நான் கருதுவது விரைவில் வெளியாகவிருக்கும் கீச்சி கீச்சி என்ற பாடல். இந்தப் பாடல் வெற்றிமாறன் தயாரித்து, நான் இசையமைத்த அனல் மேல் பனித்துளி படத்துக்காக உருவான பாடல்.
நான் எனக்கு கிடைத்த வாய்ப்பை ஒடுக்கப்பட்டவர்களின் குரலை வெளிப்படுத்த பயன்படுத்துவேன். நான் கொண்டுள்ள தொழில் தர்மம், கலாச்சாரம், தோழமையுணர்வு ஆகியவை அனைவரும் அறிந்ததே.
இந்த பாடல் குறித்து பொதுவெளியிலும் தனியாகவும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய எண்ணம் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
வாங்கோ வாங்கோ ஒன்னாகி. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment