வயிற்று வலி வர காரணம் தெரியுமா?
பொதுவாக இரவு நேரங்களில் வயிறு வலிப்பதற்கு செரிமான பிரச்சனைகளை காரணமாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இரவில் தாமதமாக உணவு அருந்துதல், உணவு அருந்திய உடன் உறங்கச் செல்லுதல், அளவுக்கு அதிகமாக நீர் அருந்துதல் போன்றவை இரவு நேரங்களில் வயிறு வலிப்பதற்கு காரணமாக அமைகின்றன. குடல் பாதிப்புகள் இருந்தாலும் இரவு நேரங்களில் வயிறு வலிக்கலாம். இதை குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இரவு நேரங்களில் அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதற்கு இரைப்பை உணவு குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் ஒரு காரணமாக இருக்கலாம். அஜீரணம் ஏற்படுத்தக்கூடிய உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாததன் காரணமாகவும் இந்த பாதிப்புகள் ஏற்படலாம். அடிக்கடி நெஞ்செரிச்சல், குமட்டுவது போன்ற உணர்வு போன்றவை இரைப்பை உணவு குழாய் நோய் இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும். இரவு நேரங்களில் தூங்கும்போது இது வயிற்று வலியின் தீவிரத்தை அதிகரிக்கும். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.
நமது உடல் உறுப்புகளில் செரிமான மண்டலத்தில் சரியான வேலைகள் நடைபெறாத போது வயிற்று வலி ஏற்படுகிறது. வாயு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அது இரவில் வயிற்று வலிக்கு வழி வகுக்கிறது. அடிக்கடி ஏப்பம் வருதல், வயிறுகளில் வீக்கம் இருப்பது போல் தோன்றுதல் போன்றவை இதற்கு சில அறிகுறிகள் ஆகும். புகை பிடிக்கும் போது கூட வாயு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்களை குடலில் உள்ள பாக்டீரியாக்கள் உடைக்கும் போது இது போன்ற வாயு குமிழிகள் உருவாகின்றன. இது இரவு நேரங்களில் வயிறு வலிக்கு வழிவகுக்கிறது. வாயு பிரச்சனை இருப்பவர்கள் அவர்களது தினசரி உணவில் பூண்டு போன்ற இயற்கை மருந்துகளை பயன்படுத்தலாம்.
நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் நமது வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவு குழாய்க்குள் நுழைவதே ஆகும். இந்த அமிலத்தன்மையினால் நமக்கு வயிற்று வலி, எரிச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு, குமட்டல், வாயு பிரச்சனைகள், வயிறு வீங்கியது போன்று தோன்றுதல், தொண்டைப் பகுதிகளில் புண் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் மது அருந்துதல் ஆகும். மேலும் தாமதமாக உணவு உட்கொள்ளுதல், சாப்பிட்டவுடன் உடனடியாக தூங்கச் செல்லுதல், அதிக உடல் எடையுடன் இருத்தல், வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், காரமான உணவுகளை உட்கொள்ளுதல், அதிகமாக சாக்லேட் மற்றும் காபி அருந்துதல் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இன்று நம்மில் பலருக்கும் அல்சர் நோய் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் தற்போதைய வாழ்க்கை நிலை, பணி சூழல் போன்றவற்றின் காரணமாக சரியான நேரத்திற்கு நாம் உணவுகளை உட்கொள்வதில்லை. தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை வயிற்றுப் புண்கள் அல்லது குடல் புண்கள் என கூறலாம். சாப்பிட்ட பிறகு வயிறு வலி இருந்தால் அது அல்சர் காரணமாக இருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுதல், உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்துதல் போன்றவை இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும்.
இரைப்பை அழற்சி நோய் என்பது வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தை குறிக்கிறது. வாந்தி, குமட்டல், வாயு பிரச்சனைகள், எரிச்சல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். சரியான நேரத்தில் இதனை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிடில், வயிற்றுப்புண்கள் புற்றுநோயாக மாறும் அபாயம் அதிகம். மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்.
அடிக்கடி வயிறுகள் வலிப்பதற்கு பித்தப்பையில் உள்ள கற்கள் கூட காரணமாக இருக்கலாம். பித்தப்பையில் கொழுப்பு படிவங்கள் படிவதால் கற்கள் உருவாகின்றன. நுண்ணிய படிகங்களாக பித்தப்பையில் குவிந்து பித்தப்பை கற்கள் ஆக மாறுகின்றன. பித்தப்பையில் வீக்கம் அல்லது தொற்று நோய்களை ஏற்படுத்தும் போது வயிற்று வலிகள் ஏற்படுகின்றன. இது சரியான நேரத்திற்கு கவனித்து சிகிச்சை அளிக்கப்படாவிடில் தீவிரவாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
நாம் உண்ணும் உணவு கழிவாக வெளியேறுகிறது. தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மலம் கழிப்பதில் பாதிப்பு இருந்தால் அது மலச்சிக்கல் பிரச்சனையாக கருதப்படுகிறது. பெருங்குடலில் கழிவுப்பொருட்கள் குவிவதன் காரணமாக வயிற்று வலி, அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மலச்சிக்கல் பாதிப்புகளை ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள், மருந்துகள் போன்றவற்றின் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.
இரவு நேரங்களில் தூங்கும்போது அடிக்கடி வயிறு வலிக்கிறது என்றால் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக வயிற்று வலி, காய்ச்சல், மூச்சு திணறல், அதீத எடை இழப்பு, வயிற்று பகுதிகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் தீவிர நிலைமைகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.