புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஹினா கான். பல சின்னத்திரை தொடர்களில் நடித்த இவர் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். சமீபத்தில் இவர் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகின. இது வதந்தியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் தனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனக் கடந்த ஜூன் 28-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹினா கானே பதிவிட்டிருந்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவுகளை இட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருந்த அந்தப்பதிவில், “நீங்கள் உங்களை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். என் போர் வடுக்களை நான் ஏற்றுகொள்கிறேன். நான் இந்தப் போராட்டத்தில் வெற்றி அடைய விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் தலையில் நான் கைவைக்கும்போது என் முடிகள் உதிர்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
அதனை நான் விரும்பவும் இல்லை. அது எனக்கு மன அழுத்தத்தையும், சோர்வையும் கொடுக்கிறது. அதனால் அது என் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணி எனது முடியை முழுவதுமாக நீக்குகிறேன்” என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஒரு ட்ரிம்மரை வைத்து தலைமுடியை வெட்டிக்கொண்டார். இது தொடர்பான அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.