கால் முறிவு – 750 சம்பளம், நடிக்கணும்னு வெறி!
‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவில் தனது திரைத்துறை பயணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் விக்ரம்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டு படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கும் நடிகர் விக்ரம், “தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படத்தோட ஸ்டன்ட் மாஸ்டரை நெனச்சாலே உடம்பெல்லாம் வலிக்குது. இந்தப் படத்துல ஒரு முக்கியமான கதாபாத்திரதை நீங்க பார்க்கமாட்டீங்க.. கேட்பீங்க.. அதுதான் ஜீ.வியோட மியூசிக். பசுபதி கூட இது எனக்கு ஆறாவது படம். `தூள்’ படத்துல ஆரம்பிச்ச பயணம் இப்போ ‘தங்கலான்’ வரைக்கும் வந்திருக்கு. துருவ்கூடவும் அவர் இப்போ நடிக்கிறாரு. மாளவிக்கா ரொம்பவே கஷ்டப்பட்டு நடிச்சிருக்காங்க. ரஞ்சித்தோட படங்கள்ல பெண்கள் ரொம்பவே திடமாக இருப்பாங்க. நடிகர் டேனியல்கிட்ட ப்ரோமோஷன் தாண்டி எங்ககூட முதல் நாள் முதல் காட்சிக்கு வாங்கன்னு கூப்பிட்டேன். அப்பதான் நாங்க இங்க எப்படி சினிமாவைக் கொண்டாடுறோம்னு தெரியும்னு சொன்னேன்.
ரஞ்சித் படமே ஓவியம் மாதிரிதான் பண்ணியிருக்காரு. ‘சேது’, ‘பிதாமகன்’, ‘ராவணன்’, ‘ஐ’ படத்தோட கஷ்டங்களை இந்த படத்தோட ஒப்பிடும்போது 8 சதவிகிதம்கூட கிடையாது. சின்ன வயசுல சினிமா தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணினதுக்குப் பிறகு சரியா படிக்கல. நாடகத்துலகூட சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துதான் நடிப்பேன். கல்லூரி காலத்துல ஒரு நாடகத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.
அந்த நாடகத்துல நடிச்சதும் பாராட்டுக்கள் கிடைச்சது. அன்னைக்கு என்னுடைய கால் உடைஞ்சுருச்சு என்னால நடக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. ஆனால் எனக்குள்ள நடிக்கணும்னு வெறி இருந்துச்சு. அப்போ இரு கைல குச்சி வச்சுக்கிட்டே மூணு வருஷம் நடந்தேன். அப்போ குச்சி வச்சுட்டே வேலைக்குப் போவேன். அப்போ 750 ரூபாய்தான் சம்பளம் கிடைக்கும்.எனக்கு நடிக்கணும் வெறி இருந்துட்டே இருந்தது. கனவை நோக்கி ஓடினால் கண்டிப்பாக அது நிறைவேறும். இன்னைக்கு நான் நடிகனாகலைன்னாலும், நடிக்கிறதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருந்துருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.