ஆடி மாதத்தில் கூழ் குடிப்பது ஏன்?
கூழ் வார்த்தல் என்பது தமிழர்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய நிகழ்வு. காலநிலை மாற்றங்களிலிருந்து காத்துக்கொள்ள தமிழர் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் கேழ்வரகு கூழ் மிகச் சிறப்பு வாய்ந்தது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்கள்தான். திருவிழாக்களும் தேரோட்டங்களும் சொந்த ஊருக்கு வந்த சொந்தங்களும் எதிர்பாராது பெய்யும் மழையும் என அனைத்துமே நம்மை பரவசமாக்கும். ஆனால், சற்று கூர்ந்து நோக்கினால் இம்மாதத்தில் பயன்படுத்தப்படும் வேப்பிலையில் தொடங்கி கூழில் சேர்க்கப்படும் வெங்காயம் வரை அனைத்திலும் அறிவியல் புதைந்துள்ளது.
இதுபற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அரீஷ்குமார்.
“பூமியின் அச்சு 231/4 டிகிரி சாய்வாக இருப்பதால் சூரியன் வடதுருவத்தை நோக்கி 6 மாதங்களும் (உத்ராயணம்) தென் துருவத்தை நோக்கி 6 மாதங்களும் (தக்ஷிணாயணம்) செல்வதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகியவை உத்ராயணம் எனவும் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தக்ஷிணாயணம் எனவும் கூறுகின்றனர்.
இதுபோக ஆறு பெரும் பொழுதுகளில் ஆனியும் ஆடியும் முதுவேனில் காலமாக குறிப்பிடப்பட்டுள்ளன. ‘ஆடி காத்துல அம்மியும் நகரும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப (தக்ஷிணாயணம்) முதுவேனில் காலத்தில் உள்ள ஆடி மாதத்தில் காற்று இயல்பாகவே அதிகரித்து காணப்படும். வெப்பமும் அதிகரிக்கும். இதனால் உடலில் உயிர் தாதுக்களான வாத, பித்த, கபத்தில் காற்றின் கூறான வாதம் இக்காலத்தில் அதிகரிக்கும்.
கால மாறுதலைப் போல உடலிலும் சீதோஷணம் மாறுபட்டு உடல் வறட்சி, செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இவ்வாறான காலநிலை மாற்றங்களிலிருந்து காத்துக்கொள்ள தமிழர் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் கேழ்வரகு கூழ் மிகச் சிறப்பு வாய்ந்தது. இக்காலத்தில் திட உணவைவிட திரவ உணவே உகந்தது என்பதை அறிந்து கேழ்வரகை கூழாகப் பருகினர். முந்தைய நாள் கரைத்துப் புளிக்க வைத்த ராகி மாவை அடுப்பேற்றி, பதம் வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மோர்,சின்ன வெங்காயம் சேர்த்துப் பருகினால், அக்கூழ் மருந்தாகவே மாற்றமடைகிறது.
இந்த மாவை அப்படியே உபயோகித்தால் வயிற்றுக் கோளாறு, சரும கோளாறு போன்றவை வரும். எனவேதான் அதைப் புளிக்க வைத்து நன்மை பயக்கும் உணவாக மாற்றி உபயோகித்தது தமிழருக்கே உரிய தனிச்சிறப்பு. வாதம் அதிகரித்தால் இனிப்பு, புளிப்பு, உப்பு போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
அதனாலேயே கூழைப் புளிக்க வைத்து உப்பு சேர்த்து வாதத்தைத் தணிக்கும் உணவாக மாற்றி உள்ளனர். அதில் காணப்படும் பாலிபினால் (poly phenol) நோய் வருவதற்கு காரணமான ஃப்ரீ ரேடிகல்ஸை (free radicals) தடுக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் காத்துக் கொள்வதற்கும் (reduce oxidative stress) உதவுகிறது. இதிலுள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் (probiotics ) நம் உடலை வலுப்பெறச் செய்து செரிமான கோளாறைப் போக்கி உடலைக் காக்கின்றன.
கூழ் வார்த்தல் என்பது தமிழர்களின் வாழ்வியலில் முக்கிய நிகழ்வு. பெரும்பொழுதாகிய சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் கோடைக்காற்று தீவிரமடையும். இக்காலத்தில் பூமி மிகவும் சூடாகவும் காணப்படும். அதே சமயம் சற்று மழையும் பொழியும். இதனால் அம்மை நோய் உருவாகி மக்களிடையே வேகமாகப் பரவும்.
இந்நோயைத் தடுப்பதற்காகவே கூழ்வார்த்தல் நிகழ்வை மாரியம்மனுக்கு திருவிழாவாக எடுத்து வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, காப்பு கட்டி, உள்ளூர் மக்கள் வெளியே செல்லாமலும் வெளியூர் மக்கள் உள்ளே வராமலும் தடுத்து விழா எடுப்பர். வேப்பிலையும் மஞ்சளும் நோய் வராமல் தடுக்கும் ஆன்டி வைரலாக செயல்படும். கூழிலில் சேர்க்கப்படும் மோர், சின்ன வெங்காயம் பித்த சமனியாக செயல்பட்டு அழலின் தன்மையைக் குறைக்கும். இதனால் உடல் வெப்பம் தணிக்கப்பட்டு அம்மை நோய் உருவாகாமல் தடுக்கப்படும்” என்றார் அவர்.