4 வது ஆடி வெள்ளியில் வெற்றியும் செல்வமும் பெருக!
ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமை இன்று, மகாலட்சுமியின் மனம் மகிழும் படி வீட்டில் வழிபட்டால், மகாலட்சுமி நிரந்தரமாக நம்முடைய வீட்டில் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
பொதுவாக பஞ்சமி என்றாலே அனைவரும் வாராகி அம்மன் வழிபாட்டினை தான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் வெள்ளிக்கிழமையில் பஞ்சமி இணைந்து வருவதும், அதிலும் வளர்பிறை பஞ்சமி வெள்ளிக்கிழமையில் வருவதும் மிகவும் ஆற்றல் மிக்க நாளாகும்.
அவ்வாறான இந்த நாளில் நாம் வாராகி அம்மனை எப்படி வழிபட்டு பலன் பெறலாம் என நாம் இங்கு பார்ப்போம்.
ஆடி 4வது வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல், மகாலட்சுமிக்கு மல்லிகை போன்ற வாசனை மலர்கள் சூட்டி அலங்காரம் செய்து, குங்குமப்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியமாக பால் பாயசம், கற்கண்டு சாதம் போன்ற வெள்ளை நிற உணவுகளை படைத்து வழிபடலாம். பிறகு சுக்கிர ஓரை நேரமான இரவு 8 மணி முதல் 9 மணிக்குள், மகாலட்சுமிக்கு முன் ஒரு அகலில் நெய் விளக்கு ஏற்றி வையுங்கள்.
நான்கு பாதாம் பருப்புக்களை எடுத்து ஒரு ஊசியில் கோர்த்து, அந்த பாதாம் பருப்புக்களை எரிகின்ற நெய் தீபத்தில் காட்டி சுட வேண்டும். சுடுகின்ற பாதாம் பருப்புகளுக்கு மேல் ஒரு ஸ்பூனை காட்டி, பாதாம் சுடும் போது வெளிவரும் கரியை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்த குங்குமப்பூவை நன்கு பொடியாக பொடித்துக் கொள்ள வேண்டும். சிறு துண்டு பச்சை கற்பூரத்தையும் நன்கு மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியுடன் ஏற்கனவே சேகரித்த கரி மற்றும் குங்குமப்பூ பொடி ஆகியவற்றை கலக்க வேண்டும். இவற்றோடு சிறிதளவு புனுகு மற்றும் சுத்தமான பசும் நெய் ஆகியவற்றை நன்கு கலந்து, ஒரு வெள்ளி குங்குமச் சிமிழில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மை போன்ற இந்த பொருளுக்கு ஸ்ரீ அஞ்சனம் என்று பெயர். இது மகாலட்சுமி வசியத்தை தரக் கூடியதாகும். பஞ்சமி திதி அன்று மகாலட்சுமிக்கு விருப்பமான 5 பொருட்களைக் கொண்டு ஸ்ரீஅஞ்சனம் தயாரிக்க வேண்டும்.