இலங்கையில் தோனியின் ஆதரவு பெற்ற ட்ரோன்!
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் ஆதரவுடன் இயங்கும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தொழில்நுட்ப நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace)இலங்கை சந்தையில் தனது நுழைவுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் வாய்ப்புகளை பெறுவதும், விவசாய நடைமுறைகளை மேம்படுத்தவும் எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் உலகளாவிய விஸ்தரிப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான பயணம் அமைந்துள்ளதாக கருடா ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 நாடுகளில் தனது இருப்பை விஸ்தரிக்கவிருப்பதாகவும், சர்வதேச வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க,10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம், பல்வேறு துறைகளில் கணிசமான தாக்கங்களை உருவாக்குவதற்கான ட்ரோன் தொழில்நுட்பத்தின் முழு திறனையும் திறக்கும் என்று கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அக்னிஸ்வர் ஜெயப்பிரகாஸ் கூறியுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர வகை ட்ரோன்களை உற்பத்தி செய்யும் கருடா ஏரோஸ்பேஸ், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கிரேக்க உற்பத்தியாளரான ஸ்பிரிட் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸுடன் (Spirit Aeronautical Systems) கூட்டு சேர்ந்தது.
இந்தியாவின் ட்ரோன் துறையில் வளர்ச்சி மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான தேல்ஸுடன் (Thales) ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.
Courtesy: Sivaa Mayuri