வீட்டு உரிமையாளரிடம் 5 கோடி கேட்கும் பிரபல இசையமைப்பாளர்!
வாடகை நிலுவை தரவில்லை என தன் மீது பொலிஸாரில் முறைப்பாடு அளித்த வீட்டு உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை – நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் யுவன் சங்கர் ராஜா குடியிருந்துள்ளார்.
குறித்த வீட்டின் உரிமையாளர், திருவல்லிக்கேணி பொலிஸ் துணை ஆணையரிடம் அளித்துள்ள முறைப்பாட்டில்,
தனது வீட்டில் குடியிருந்த யுவன் சங்கர் ராஜா 20 இலட்சம் ரூபாய் வாடகை நிலுவை தரவேண்டியுள்ளதாகவும், தன்னிடம் சொல்லாமலேயே அவர் வீட்டை விட்டுச் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக வீட்டின் உரிமையாளருக்கு யுவன் சங்கர் ராஜா வழக்கறிஞர் மூலம் சம்மன் அனுப்பியுள்ளார்.
அதில், பல வருடங்களாக பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படும் தன்னைப் பற்றி அவதூறாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் குறித்த வீட்டின் உரிமையாளர் அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.